Tovino Thomas: ‛திரும்ப நடிக்கணுமானு யோசிக்க வைச்சுட்டாங்க’ -மின்னல் முரளி ‘ டோவினோ தாமஸ்’ ஆதங்கம்!
மலையாள திரை உலகம் அப்படிதான் வேலை செய்கிறது. ஆனால் ஒரு படத்தில் நடித்து முடித்த பின், சில படங்களை நிறுத்தி விட்டு 3 மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டேன்.
நெட்ஃபிளிக்ஸ் நடத்திய ரவுண்ட் டேபிள் 2021 -இல் பிரபல நடிகர்களான டாப்ஸி, டோவினோ தாமஸ், ரவீணா டாண்டன், சானியா மல்கோத்ரா, சானியா மல்ஹோத்ரா, ஆதர்ஷ் கவுரவ், கொன்கனா சென் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட விமர்சகரான ராஜூவ் மசந்த் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டில் அவர்கள் நடித்த படங்கள் குறித்த பல உரையாடல்கள் நடந்தன.
அந்த உரையாடலின் போது, டாப்ஸி பேசும் போது, “ நான் நடிக்கும் போது மானிட்டர் பார்க்க மாட்டேன். என்னை இயக்க வருகிற இயக்குநரிடம் முதலில் எனக்கு க்ராப்ட் தெரியாது என்பதை தெளிவாக சொல்லி விடுவேன். நான் நடித்த படங்களில் கிடைத்த அனுபவங்கள் மூலமாகதான் நான் வளர்ந்துருக்கிறேன். என்னுடைய டைரக்டர் ஏதாவது ஒரு ஷாட்டை பார்க்க சொன்னால் கூட நான் பார்க்க மாட்டேன். மாறாக நான் படத்தில் பார்த்து கொள்கிறேன் என்று கூறுவேன். சிங்கிள் ஃப்ரேமை கூட பார்க்க மாட்டேன். அந்த அளவு டைரக்டரிடம் என்னை ஒப்படைத்து விடுவேன். டைரக்டரிடம் இருந்து கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடிப்பதற்கு தேவையான சரியான டைரக்ஷன் கிடைக்காத போது, அது உண்மையில் எனக்கு செட்டில் சோகத்தை உண்டாக்கும்.
அப்போது பேசிய, ரவீனா இது போன்ற குழப்பான டைரக்டர்களால் நானும் அவதிப்பட்டிருக்கிறேன். அது போன்ற சமயங்களில் அவர்களிடம் இருந்து இரண்டு விதமான பதில்கள் வரும். அப்போது அதில் எதை நாம் பின்பற்றுவது என்ற குழப்பம் வரும். அந்த சமயங்களில் நடிகையாக நானே யூகித்து நடிப்பேன் அது சில சமயங்களில் சில அது தவறாக வந்து விடும். இறுதியாக விமர்சனங்களில் நாங்கள் விமர்சிக்கப்படுவோம்.
இவர்களை தொடர்ந்து பேசிய டோவினோ தாமஸ் “ நான் பல இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன். பொதுவாக நான் ஒருபடத்திற்கும் மற்றொரு படத்திற்குமிடையே இடைவெளி எடுப்பதில்லை. மலையாள திரை உலகம்ம் அப்படிதான் வேலை செய்கிறது. ஆனால் ஒரு படத்தில் நடித்து முடித்த பின், சில படங்களை நிறுத்தி விட்டு 3 மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டேன். பயணம் செய்தேன். அப்போது என்னையே நான் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேன்.
சில விஷயங்கள் நம் கைகளில் இருப்பதில்லை. நாம் சில இயக்குநர்களை நம்புகிறோம். கதையை சிறப்பாக சொல்லிவிடுவார்கள். செட்டில் அதனை படமாக்கும் போது அது வேறு விதமாக இருக்கும். டைரக்டர் குழப்பமாக இருக்கிறார் என்பதே நமக்கு மூன்று, நான்கு நாட்களில்தான் தெரிய வரும். ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. காரணம் இதில் ஏராளாமானோர் சம்மந்தப்பட்டுள்ளார்கள். அது போன்ற படங்களின் விமர்சனங்களில் முன்னணி நடிகர்கள்தான் விமர்சிக்கப்படுகிறார்கள். டைரக்டர்கள் அல்ல..” என்றார்,.