குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் மக்கள்... நெகிழ்ச்சியில் படக்குழு - எந்த படம் தெரியுமா?
பான் இந்தியா அளவில் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதனால் படத்தின் தலைப்பை ஆங்கிலத்தில் வைத்தோம் என படக்குழு விளக்கம்.

சேலத்தில் உள்ள தனியார் திரையரங்கில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன், நடிகர் சசிகுமார் ரசிகர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களிடத்தில் இந்த வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி தலைப்பிற்கான காரணம் படத்தில் உள்ளது. மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதை மறந்து மகிழ்ச்சியாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக டூரிஸ்ட் ஃபேமிலி என்று படத்தின் பெயரை வைத்துள்ளோம். குடும்ப படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர் இயக்குனர் மீது நம்பிக்கை வைத்தார். இயக்குனர் நடிகர் மீது நம்பிக்கை வைத்தார். நாங்கள் அனைவரும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப திரைப்படத்தை எடுத்து உள்ளோம் என்றனர்.
ஓடிடியில் மக்கள் திரைப்படத்தை பார்ப்பார்கள் என்று நினைத்தோம் ஆனால் திரையரங்கிற்கு குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும்போது குடும்ப படங்களை பார்க்க மக்கள் விரும்பி வருவார்கள் என நிரூபித்துள்ளனர். அன்பை போதிக்கும் படமாகவும், பொழுதுபோக்கு படமாகவும் அமைந்துள்ளது. படத்தின் கதையை கேட்கும் போது மிகவும் பிடித்ததால் நடித்தேன். இயக்குனர் கதையை சொல்லும்போது இந்த கதையில் நான் தான் நடிப்பேன் வேறு யாரும் நடிக்க மாட்டார்கள் என இயக்குனரிடம் சொன்னேன். படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. சிம்ரன் படத்திற்குள் வந்தவுடன் படம் இன்னும் அழகாய் வந்துவிட்டது என்று கூறினார்.
படத்தின் பெயரில் தமிழை தவிர்க்கவில்லை. ஆனால் பான் இந்தியா அளவில் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதனால் படத்தின் தலைப்பை ஆங்கிலத்தில் வைத்தோம். தமிழில் படத்தின் பெயர் வைத்தால் வரிவிலக்கு முன்பு இருந்தது, ஆனால் தற்போது அது இல்லை என்றார்.
இது போன்ற குடும்ப படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் குடும்ப படங்களை இயக்கினால் வெற்றியடைய முடியும் என புதிய இயக்குனர்கள் நம்புபவர்கள். மக்கள் வரவேற்பு அளித்தால் இனிவரும் புதிய இயக்குனர்கள் குடும்ப படங்களை இயக்குவார்கள் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
இயக்குனர் அடுத்த படம் குறித்த கேள்விக்கு, இன்னும் கதை எதுவும் யோசிக்கவில்லை. கதை எழுதிய பிறகு அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுக்க முடியும். எனக்கு அனைத்து நடிகர்களுடன் படம் எடுக்க வேண்டும் என ஆசை உள்ளது. குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. ஆனால் பெரிய படம் இயக்க வேண்டும் என ஆசை உள்ளது என்றார்.
சசிகுமாரை மீண்டும் இயக்குனராக எதிர்பார்க்கலாமா என்பது குறித்து கேள்விக்கு, சசிகுமாரை கூடிய விரைவில் மீண்டும் இயக்குனராக பார்க்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாகும். வரலாற்றுப் படத்தை இயக்க உள்ளேன். அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அதற்கான வேலைகள் முடிந்தவுடன் படம் பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.





















