Madras HC Update: சிகரெட்.. புஸ்னு புகை.. விஐபி படத்தால் தனுஷுக்கு வந்த புது சிக்கல்!
வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சிகள் மீது தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபர் தனுஷ். இவரது திரைவாழ்க்கையில் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. தொடர் தோல்விகளால் தடுமாறி வந்த தனுஷிற்கு இந்த படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்படம் பிடிக்கும் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது.
2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் மன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அவர்கள் தொடர்ந்த வழக்கில், வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்திருந்த உண்டர்பார்ஸ் நிறுவனம் விளம்பரத்தடை மற்றும் வர்த்தக ஒழுங்குமுறைச் சட்டம் 2003-ன் விதிகளுக்கு எதிராக சிகரெட் மற்றும் புகையிலை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், அவர்கள் வேயைில்லா பட்டதாரி படத்தை தயாரித்த உண்டர்பார்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு தொடர்ந்திருந்தது.
மேலும், அவர்கள் தொடர்ந்த வழக்கில் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் 20 விநாடிகள் காட்சியில் கீழே புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்ற வாசகம் திரையிடப்படாமலே அந்த காட்சி இடம்பெற்றிருக்கும். இது புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை சட்டத்திற்கு எதிரானது என்று குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தனுஷின் உண்டர்பார் பிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு (பி.ஐ.எல்.) சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று வாதிட்டார். மேலும், ஆட்சேபனைக்குரிய அனைத்து போஸ்டர்களும் அகற்றப்பட்டு, மன்னிப்புகடிதம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் உண்டர்பார் பிலிம்ஸ் உறுதியளித்ததாகவும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், புகையிலை பயன்பாடு ஆபத்தான உடல்நலக்கேடு. புகையிலை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைக்காக இந்தியா ஆண்டுக்கு சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடுகிறது. எனவே, வெளியிடப்பட்ட சட்ட நோட்டீசைத் தொடர்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ், அமலாபால், மறைந்த நடிகர் விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்