இன்று 210 கோடி சொல்வார்கள்.. நாளை 300 கோடி சொல்வார்கள்.. அவர்களுக்கு தான் தெரியும்... வாரிசு வசூல் பற்றி திருப்பூர் சுப்பிரமணியம் பளிச்!
10 கோடி சம்பளம் வாங்கியவர்கள் இன்று 150 கோடி வாங்கும்படி செய்துவிட்டீர்கள். தவறான தரவுகளைக் கொடுத்து கொடுத்து நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள்” - திருப்பூர் சுப்பிரமணியம்
கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகம் முழுவதும் வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம். படம் வெளியான நாள் முதல் வாரிசு படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரிக்குவித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முன்னதாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ், வாரிசு படம் உலக அளவில் 210 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
View this post on Instagram
210 கோடி வசூல் உண்மையா?
இந்நிலையில், இந்த அறிவிப்பு போலியானது என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வந்தது.
இந்நிலையில் இந்தத் தகவல் குறித்த உண்மையை தெரிந்து கொள்ள நமது ஏபிபி நாடு செய்தியாளர், திருப்பூர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு பேசினார். அந்த உரையாடல் பின்வருமாறு:
”கேள்வி: செய்தியாளர் - திருப்பூர் சுப்பிரமணியம் இடையேயான உரையாடல் “வாரிசு படம் 7 நாள்களில் 210 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவு சாத்தியம்?
பதில்: தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இவ்வாறு சொல்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் எங்களிடம் அதற்கான தரவு இல்லை. அதனால் இதைப் பற்றி பேச முடியாது.
கேள்வி: வாரிசு படத்துக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளின் அடிப்படையில் இந்த வசூல் சாத்தியம் என்று சொல்லலாமா?
பதில்: ரெட் ஜெயிண்ட் மூவிஸ் க்கு இது தெரியும். இல்லை போனி கபூருக்கு தெரியும், இல்லை லலித் குமாருக்கு தெரியும். இவர்கள் மூன்று பேரில் யாரெனும் ஒருவர் சொன்னால் தான் அது உண்மையான வசூல். இன்று 210 கோடி என்று சொல்வார்கள், நாளை 300 கோடி என்று சொல்வார்கள். இப்படி சொல்லிக்கொண்டே தான் செல்வார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம் படங்கள் ரிலீசான காலத்தில் மாவட்டவாரியாக இந்த இந்தத் திரையரங்குகளில் இவ்வளவு வசூல் எனத் தகவல் தெரிவிப்பார்கள்.
அது மாதிரி இவர்களை இப்போது தகவல் தர சொல்லுங்கள்.. யாரும் தர மாட்டார்கள். இவர்களின் ஒரே நோக்கம், கதாநாயகர்களை திருப்திப்படுத்துவது தான். இதையெல்லாம் நாம் அப்படியே கடந்து போக வேண்டும், இவற்றைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது.
கேள்வி: நீங்கள் குறிப்பிட்டது போல் மாவட்டவாரியான வசூல் விவரங்கள் இப்போது தரப்படுவதில்லை. தயாரிப்பாளர் பக்கமிருந்து ஒரு கண் துடைப்பு வேலை இது என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: அதில் சந்தேகமே இல்லை. மேலும் வேறு எந்தத் தொழிலில் இருப்பவர்களும் இது போன்று தரவுகளைக் கொடுப்பதில்லை. ஒரு ஓட்டல், மோட்டார் கம்பெனி, துணிக்கடை என வேறு எங்கும் இதுபோன்று தரவுகளைத் தருவதில்லை.
நீங்கள் தான் இப்படி கொடுக்கிறீர்கள். நீங்கள் கொடுத்ததில் என்ன பலன்? 10 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்கள் இன்று 150 கோடி வாங்கும்படி செய்துவிட்டீர்கள்..
படம் எடுப்பவர்கள் யாரும் இன்று இலாபகரமா இல்லை. இதுபோன்று தவறான தரவுகளைக் கொடுத்து கொடுத்து நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் அடுத்த படம் எடுப்பதில்லை.
இவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் வருகிறதென்றால், நிறைய பேர் இவர்களை வைத்து மீண்டும் படம் எடுத்திருப்பார்கள். ஆனால் யார் இவர்களை வைத்து யார் மீண்டும் படம் எடுத்திருக்கிறார்கள்? யாரும் எடுக்கவே முடியாது. ஏனென்றால் இந்த பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்களுக்கு எந்த லாபமும் ஏற்படுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.