பராசக்தியை விட ஜனநாயகனுக்கு தான் மவுசு.. திருப்பூர் சுப்பிரமணியம் ஓபன் டாக்!
ஜனநாயகன், பராசக்தி படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வரவில்லை. சில படங்களுக்கு முதல் நாள் இரவு கூட தணிக்கை சான்றிதழ் கிடைச்சிருக்கு. கண்டிப்பாக இரு படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்து விடும்.

2026 பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் பராசக்தியை விட ஜனநாயகனுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கிறது என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒருநாள் இடைவெளியில் ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாகிறது. கடந்த சில ஆண்டுகளில் பார்க்கும்போது பேட்ட, விஸ்வாசம், துணிவு - வாரிசு ஆகிய படங்கள் நேரடியாக ஒரே நாளில் களம் கண்டது. இதைப் பற்றி விவாதிப்பது எனக்கு விசித்திரமாக தெரிகிறது. விஜய், அஜித் படங்கள் வந்தபோது இருதரப்பு ரசிகர்களும் அமைதியாக வந்து படம் பார்த்து அமைதியாக சென்றார்கள்.
ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏன்?
பராசக்தி முதலில் ஜனவரி 14ம் தேதி ரிலீசாவதாக இருந்தது. ஜனநாயகன் மற்றும் பராசக்தி இடையே 5 நாட்கள் இடைவெளி இருந்தது. இப்போது இந்த 5 நாட்களுக்காக பராசக்தி படம் புக் செய்திருக்கும் தியேட்டர்களுக்கு ஜனநாயகன் படம் விநியோகஸ்தர்கள் கொடுக்க மாட்டார்கள். பொங்கல் திருவிழா விடுமுறை ஜனவரி 10ம் தேதி தொடங்கி விடும் சூழல் நிலையில் அந்த 5 நாட்கள் தியேட்டரை சும்மா வைத்திருக்க முடியாது. வசூல் பாதிக்கும் என்பதால் ஜனவரி 10க்கு மாற்றப்பட்டது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்கும்
ஜனநாயகன், பராசக்தி படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வரவில்லை. சில படங்களுக்கு முதல் நாள் இரவு கூட தணிக்கை சான்றிதழ் கிடைச்சிருக்கு. 2 நாட்களுக்குள் கண்டிப்பாக இரு படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்து விடும். இரண்டு படங்களில் ஜனநாயகனுக்கு தான் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அதில் மாற்று கருத்து இல்லை.
ஜனநாயகனுக்கு அதிகமான தியேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் இந்த விஷயத்தில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஜனநாயகன் மட்டுமே எல்லா தியேட்டரிலும் போட வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தவித நியாயமும் கிடையாது. விநியோகஸ்தர்கள் கொடுத்தால் தான் ஒரே ஸ்கிரீன் கொண்ட தியேட்டரில் தலா இரண்டு காட்சிகள் திரையிட முடியும். இந்த விஷயத்தில் ஜனநாயகன் படத்தை திரையிடவில்லை என தியேட்டர் உரிமையாளர்களை திட்டுவதில் எந்த நியாயமும் இல்லை.
அதிக விலைக்கு விற்பனை
மேலும் தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் ஜனநாயகன் தான். ஓடிடி, சேட்டிலைட், வெளிநாட்டு உரிமை போன்றவை எல்லாம் சேர்த்து இப்படம் ரூ.300 கோடிக்கு விற்பனையாகி இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த படம் தான் அதிக விலைக்கு போயுள்ளது. அந்த படத்தை விநியோகம் செய்பவர்கள் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தான்” எனவும் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.





















