Thiyagarajan Kumararaja Exclusive: ”லைஃப் தொடங்குவது செக்ஸில் இருந்துதான்”: மனம் திறந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா
தியாகராஜா குமாரராஜாவுடனான நேர்காணலில் இருந்து ஒரு சிரிய பகுதி இது.
கேள்வி : ஆரண்யகாண்டம், சூப்பர் டீலக்ஸ் இப்போது நினைவோ ஒரு பறவை இந்த மூன்றுப் படங்களின் தொடக்கக் காட்சிகளும் காமம் சார்ந்த காட்சிகளாவே அமைந்திருக்கின்றன. ஒரு படத்தை செக்ஸில் இருந்து தொடங்குவது உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?
தியாகராஜா குமாரராஜா: தற்போது நான் ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன் அந்தப் படத்தின் தொடக்கக் காட்சி அப்படியில்லை. ஆனால் நான் எழுதிவரும் மற்றொரு படத்தின் ஓப்பனிங் உடலுறவுக் காட்சியில்தான் தொடங்குகிறது. என்னுடைய படங்களை நான் அப்படி தொடங்குவதில் எனக்கு எந்த செண்டிமெண்ட்டும் இல்லை. ஒரு படத்தில் ஓப்பனிங்கை செக்ஸ் சீனில் இருந்து தொடங்கினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் இப்படி எந்த நம்பிக்கையும் இதற்கு பின்னால் இல்லை.
செக்ஸிலிருந்துதான் வாழ்க்கைத் தொடங்குகிறது என எனக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அதனால் தான் என்னுடைய படங்களின் தொடக்கம் அப்படி அமைகிறது என நான் நம்புகிறேன். அதே நேரத்தில் காமத்தை விரசமாக காட்டுவதிலோ அல்லது முழுவதுமாக உடல் ரீதியாக மட்டுமே சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.என்னுடையப் படங்களில் முடிந்த அளவிற்கு உடலை காட்டுவதை தவிர்த்து செக்ஸை ஒரு புதிதான அனுபவமாகத்தான் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஒரு கதையின் தேவைக்கேற்ப காமம் சார்ந்த காட்சிகள் காட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் தேவை இல்லாத இடங்களில் அதை புகுத்துவது கூடாது என நான் நம்புகிறேன்.
கேள்வி: உங்கள் படங்களில் ஒளியமைப்பு ஏன் யதார்த்தத்தைப் போல் இல்லாமல் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. எதார்த்தத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய ஒரு தெருவிளக்கு உங்கள் படத்தில் ஏன் ஊதா நிறத்தில் இருக்கிறது. ஒருவகையில் ரசிக்க முடிந்தாலும் அது சற்று இயல்பிலிருந்து விலகியிருப்பதாக படுகிறதே?
தியாகராஜா குமாரராஜா: உங்களுக்கு என்னுடையப் படங்களின் ஒளியமைப்பு இயல்பாகத் தெரியவில்லை இல்லையா? அதுதான் அதன் நோக்கமே. எதார்த்தம் என்கிற ஒரு கருதுகோல் மேல் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் என்று நீங்கள் சொல்லும் படங்கள் எல்லாமே லைட் செட் செய்துதான் எடுக்கப்படுகின்றன. என்னுடையப் படங்களில் நான் அதை சற்று மிகைப்படுத்திக் காட்டுகிறேன். அவ்வளவு தான். கூடுதலாக நீங்கள் யதார்த்தத்தில் பார்த்த ஒன்றையே மறுபடியும் நான் ஏன் உங்களுக்கு படத்திலும் காட்டவேண்டும். அப்படி காட்டினால் அதில் எந்தவிதமான புதிய அனுபவமும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.
கேள்வி: ஒரு முழு முற்றான சைன்ஸ் ஃபிக்ஷன் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறதா ?
குமாரராஜா: நிச்சயம் இருக்கிறது .
தொடரும்.....