Leo Special Show: அதிக விலைக்கு விற்கப்படும் லியோ பட டிக்கெட்.. சாட்டையை சுழற்றிய சென்னை கமிஷனர்
Leo Special Show: விதிமுறைகளை முறையாக பின்பற்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகும் நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
லியோ
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கெளவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. லோகேஷ் LCU -வில் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22ல் லியோ படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்தப் பாடல் அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத் அசல் கோலார் பாடியுள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பு, லியோ படத்தின் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் ‘நா ரெடிதான்’, 'Bad Ass' பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
சிறப்புக் காட்சி - லியோ
இச்சூழலில், லியோ திரைப்படத்துக்கான முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கப்பட வேண்டும். சிறப்புக் காட்சிகளுக்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகளாக லியோ திரைப்படத்தை திரையிடவும், காலை 09.00 மணிக்கு தொடங்கி அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.
லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மேலும், இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்
இந்த நிலையில், 19.10.2023 முதல் 24.10.203 வரையில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்த முறையில் அமைத்திட வேண்டும்;
மேலும், அரசு அனுமதி அளித்துள்ள காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்த மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.