Sampath Ram : விளையாடியது விபரீதமாக முடிந்தது.. நடிகர் சம்பத் ராம் தற்கொலைக்கு காரணம் இதுவா? பகீர் தகவல்..
கன்னட நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் சம்பத் ராம் நண்பர் மற்றும் சக நடிகருமான ராஜேஷ் துருவா.
அக்னிசாக்ஷி என்ற கன்னட சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சம்பத் ஜே ராம். 35 வயதான அவர் ஏப்ரல் 22ம் தேதியான நேற்று, பெங்களூருவின் நெலமங்கலவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இந்த தகவல் தொலைக்காட்சி கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தற்கொலைக்கு காரணம் ?
சம்பத் ராம் மரணம் குறித்த காரணம் சரியாக தெரியாத நிலையில், அவரின் நண்பர் மற்றும் சக நடிகரான ராஜேஷ் துருவா தற்கொலைக்கான காரணம் குறித்து கூறியுள்ள ஒரு தகவல் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சம்பத் ராம் மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அதனால் மனைவியை மிரட்டுவதற்காக விளையாட்டாக நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக செய்த ஒரு செயல் துரதிர்ஷ்டவசமாக விபரீதமாக முடிந்துள்ளது.
நடிகர் சம்பத் ராமுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதனால் இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவதூறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டார் நடிகர் ராஜேஷ் துருவா.
ராஜேஷ் துருவாவின் உருக்கமான பதிவு :
மேலும் தனது நண்பர் சம்பத் ராம் நினைவாக ராஜேஷ் துருவா ஃபேஸ்புக் மூலம் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " உங்கள் பிரிவை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. உங்களின் கனவை நினைவாக்க இன்னும் பல காலங்கள் உள்ளன. உங்களை வெள்ளித்திரையில் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. தயவு செய்து திரும்பி வாருங்கள்" என மிகவும் உருக்கமான பதிவை அவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். சிரித்த முகத்துடன் என்றுமே காணப்படும் சம்பத் ராம் மரணம் கன்னட திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்னிசாக்ஷி சீரியலில் தொடங்கிய சம்பத் ராம் மற்றும் ராஜேஷ் துருவாவின் நட்பு மிகவும் நெருக்கமானது. அவர்கள் இருவரும் இணைந்து ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத் ராமின் இறுதிச்சடங்குகள் ஏப்ரல் 23-ஆம் தேதி அவரது சொந்த ஊரான என்.ஆர்.புராவில் நடைபெற்றது.