(Source: ECI/ABP News/ABP Majha)
'இவர் தான் அடுத்த கங்கனா ரனாவத்..' சிவ தாண்டவம் பாடிய ’தி கேரளா ஸ்டோரி’ நடிகை..! பட்டம் கொடுத்த நெட்டிசன்கள்!
கடந்த 15 ஆண்டுகளில் கவனமீர்க்கும்படியான படங்கள் கிடைக்காமல் போராடி வந்த அடா சர்மாவுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே ‘தி கேரள ஸ்டோரி திரைப்படம்’ கடந்த மே 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தி கேரளா ஸ்டோரி சர்ச்சை
'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானபோது தொடங்கிய சர்ச்சை, இன்று வரை ஓய்ந்தபாடில்லை. 32 ஆயிரம் பெண்கள் மதம் மாற்றப்பட்டதாக ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டு பின் மூன்று எனக் குறைக்கப்பட்டது தொடங்கி, படத்துக்கு மேற்கு வங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது வரை சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
மற்றொருபுறம் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பாக்ஸ் ஆஃபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சைகள் தொடங்கியது முதல் இணையத்தில் நாள்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் மற்றொரு பெயர் நடிகை அதா ஷர்மா.
படத்துக்காக களமிறங்கிய அதா ஷர்மா!
தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியராக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் கொண்டு சேர்க்கப்படும் இந்து பெண்ணாக நடித்த அதா ஷர்மா, தொடர்ந்து ட்விட்டரில் இப்படத்துக்கான விளம்பரப் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார்.
குறிப்பாக சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், அதா ஷர்மா இவற்றுக்கு தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தும், விளம்பரப் பணிகளை மேற்கொண்டும் வந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா?
முன்னதாக தமிழ்நாடு, கேரள அரசுகள் இப்படத்துக்கு தடை கோடிய நிலையில், தான் கேரளா மற்றும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், தன் தந்தை மதுரையைச் சேர்ந்தவர், தன் தாய் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்றும் நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன் உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் என்றும் தன் பெயரை உச்சரிக்க பலரும் திணறியதால் தன் பெயரை அதா ஷர்மா என மாற்றிக் கொண்டதாகவும் தன் நேர்காணல் ஒன்றில் கடந்த வாரம் அதா ஷர்மா குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த கங்கனா ரனாவத்தா?
மேலும், முன்னதாக இப்படத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் தடை விதித்த நிலையில், தடைகளை எதிர்கொள்வதற்காக சிவ தாண்டவம் பாடியும், சிவனுக்கு பூஜை செய்தும் அதா ஷர்மா வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ட்ரோல்களை சம்பாதித்தது.
இந்நிலையில் அதா ஷர்மா தான் பாலிவுட்டின் அடுத்த கங்கனா ரனாவத்தாக உருவெடுத்துள்ளார் என்றும், இணையவாசிகளின் கவனத்தைப் பெறுவதற்காக தொடர்ந்து இதுபோன்ற ஸ்டண்ட்களை அதா ஷர்மா செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The Kerala Story actress, Adah Sharma sings Shiv Tandav saying that it gives her the energy to face bans.#TheKeralaStory pic.twitter.com/KFYifN6odD
— Kreately.in (@KreatelyMedia) May 11, 2023
கடந்த 2008ஆம் ஆண்டு பாலிவுட்டில் ‘1920’ எனும் படத்தின் மூலம் அறிமுகமான அதா ஷர்மா, தொடர்ந்து ஹஸ்ஸி தோ ஃபஸ்ஸி, கரம், க்ஷனம், என பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி
தமிழில் 'இது நம்ம ஆளு', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களிலும் அதா ஷர்மா நடித்துள்ளார். மற்றொருபுறம் வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து அதா ஷர்மா நடித்து வருகிறார்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் கவனமீர்க்கும்படியான படங்கள் கிடைக்காமல் போராடி வந்த அதா சர்மாவுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்நிலையில், அதா ஷர்மா இந்தக் காரணத்தினாலேயே தலைகால் புரியாமல் இப்படி நடந்துகொள்கிறார் எனவும் பாலிவுட் வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.