கோலாகலமாக நடந்து முடிந்த 14வது நார்வே தமிழ் திரைப்பட விழா!
இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.
நார்வேயில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஆதரவுடன் நான்கு நாட்கள் குறுந் திரையிடல், முழுநீளத் திரைப்படம் திரையிடல் ஆவணப்படம் திரையிடல், சர்வதேச திரைப்படங்கள் திரையிடல், காணொளிகள் திரையிடல் என ஆடல், பாடலுடன் கூடிய கொண்டாட்டமான திரைப்பட விழா நடைபெற்றுள்ளது.
இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்ட நிலையில், அவருக்கு விசாரணை (2017) மற்றும் அசுரன் (2020) திரைப்படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.
இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் உருவான "இரவின் நிழல்", ஈழத்தின் இயக்குனர் விமல் ஆக்கத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு குறும்படங்கள் எழில் - சுகந்தி, ஜோசுவா வரத் தயாரிப்பில் உருவான இருள் அத்தியாயம், மற்றும் ஜூட்டு சுகந்தனின் இயக்கத்தில் "பாலை நிலம்" மற்றும் மலேசியத் திரைப்படம் செந்தோழன் செங்கதிரவன் ஆகிய திரைப்படங்களும் ஏப்ரல் 27ஆம் தேதி திரையிடப்பட்டன.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான "மாமனிதன் ", திரைப்படம், மாலா மணியன் தயாரிப்பில், கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவான "சிறகு" திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நார்வேயில் முதல் முறையாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து "லாக் அப் டெத்" குறும்படமும், A home away from Home", Christmas Snow, போன்ற திரைப்படங்களும் இரண்டாவது நாள் திரையிடப்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது நாள் "தமிழர் விருதுகள்" வழங்கும் நிகழ்வும், இன்னிசை மாலை நிகழ்ச்சி நார்வேயில் வாழ்கின்ற இளம் கலைஞர்களால், டென்மார்க் நாட்டில் இருந்து வருகை தந்து சிறப்பித்த அஜய் இளங்கோ, ரிசேன தர்மசேகர், ஐஸா குணபாலன் ஆகியோரால் பாடப்பட்ட பாடல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பையும், அளவற்ற கைத்தட்டல்களையும் பெற்றன. நான்கு கலைக்கூட மாணவர்கள் அனைத்து வகையான நடனங்களையும் வழங்கி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள் .
நிறைவு நாள் அன்று முத்துநகர் படுகொலை - ஆவணப்படம், DO OVER சிறந்த முழுநீள விழிப்புணர்வு திரைப்படம் திரையிடப்பட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. நிறைவு நாள் அன்றும் பாடல், ஆடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்பட விருது ’டூ ஓவர்’ படத்திற்கு வழங்கப்பட்டது.
14ஆவது ஆண்டில் சிறப்பம்சமாக இயக்குநர் வெற்றிமாறன் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, மக்களோடு பல உரையாடல்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அங்கிருந்தோர் உடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.