Thalaivar 171: பக்கா மாஸ்.... தலைவர் 171: லோகேஷ் கனராஜ் உடன் இணைகிறார் ரஜினிகாந்த்?
ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸின் கீழ் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகி இந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தலைவர் 170 மற்றும் 171
முன்னதாக தன் 170ஆவது படத்துக்காக ஜெய்பீம் பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் உடன் நடிகர் ரஜினிகாந்த் இணைவதாகத் தகவல் வெளியானது. சென்ற மார்ச் 2ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாவும், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
வேறு வேறு படங்களில் பிசியாக இருக்கும் ரஜினி, லோகேஷ்
நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து வெகுசில படங்களை இயக்கி வளர்ந்து வரும் இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் மாஸ்டர், விக்ரம் படங்களில் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் கைக்கோர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபுறம் ஜெயிலர் படத்தின் இறுதிக்கப்பட்ட ஷூட்டிங் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார். மற்றொருபுறம் லியோ படத்தின் வெளியீட்டுத் தேதியை ஏற்கெனவே அறிவித்து விட்டு, காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக லோகேஷ் கனகராஜ் தயாராகி வருகிறார்.
இணைவது எப்போது?
ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், மற்றொரு புறம் லோகேஷ் இயக்கி வரும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் 170ஆவது படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணையும் 171ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கைவிடப்பட்ட ப்ராஜக்ட்
ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸின் கீழ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகி இந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் நடிகர் கமல்ஹாசனுடன் கைக்கோர்த்து கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமான விக்ரம் மூலம் வெற்றிக்கொடி நாட்டினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் உடன் இணைய மீண்டும் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும், இதற்காக இருவரும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.