“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

நான் ருத்ராட்சம் அணிந்திருக்கிறேன் பொய் சொல்லவில்லை என கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் வாதாடியது பரபரப்பை கிளப்பியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.
விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரம் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சஞ்சய் ராய்க்கும் நீதிபதிக்கும் இடையே நடைபெற்ற வாதம் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அதாவது, இந்த வழக்கு நீதிபதி அனிர்பன் தாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சனிக்கிழமை சீல்டா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது பெரும் நாடகம் அரங்கேறியது.
நீதிபதி அனிர்பன் தாஸ் கூறுகையில், "பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவரை கொலை செய்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் நீங்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்." என்றார்.
இதற்கு சஞ்சய் ராய், "நான் குற்றவாளி இல்லை. நான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்" என்றார். இருப்பினும், நீதிபதி தாஸ் இதை நம்பவில்லை. "இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி நீங்கள் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டீர்கள். நீங்கள் தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என அவர் கூறினார்
பின்னர் சஞ்சய் ராய் கூறுகையில், "ஐபிஎஸ் அதிகாரிகள் என்னிடம் கேட்டதை மட்டுமே நான் சொன்னேன்... நான் ரூத்ராக்ஷ மாலை அணிந்திருக்கிறேன். நான் பொய் சொல்லி உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால், ரூத்ராக்ஷம் ஏன் விழவில்லை? தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் என்னிடம் சொன்னதைத்தான் நான் சொன்னேன்." என்றார்.
நீதிபதி சிறிதும் அசையாமல், "திங்கட்கிழமை நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்போம். தண்டனையும் அன்றே அறிவிக்கப்படும்" என்றார். பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவுகள் 64, 66 மற்றும் 103 இன் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்பவர் எவருக்கும் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத ஒரு காலத்திற்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும், ஆனால் அது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.
பிரிவு 103, கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.
எனவே, திங்கட்கிழமை நடைபெறும் விசாரணையில் சஞ்சய் ராயை அவரது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவோ அல்லது தூக்கு மேடைக்கு அனுப்பவோ முடியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

