Kavita Chaudhary: இந்தி சீரியல் சோகம்! போலீஸ் கதாபாத்திரம், சர்ஃப் எக்ஸல் விளம்பர புகழ் கவிதா சௌத்ரி உயிரிழப்பு!
Kavita Chaudhary: குறிப்பாக இந்தி சீரியல் உலகில் பெரும் பங்காற்றியுள்ள கவிதா சௌத்ரி, 1989ஆம் ஆண்டு நடித்த உடான் எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் ரசிகர்களை இன்றளவும் கொண்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி (Kavita Chaudhary) மாரடைப்பால் உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
கவிதா சௌத்ரி:
குறிப்பாக இந்தி சீரியல் உலகில் பெரும் பங்காற்றியுள்ள கவிதா சௌத்ரி, 1989ஆம் ஆண்டு நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் ரசிகர்களை இன்றளவும் கொண்டுள்ளது. 90களில் இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபல ‘சர்ஃப் எக்ஸல்’ விளம்பரங்களில் ‘லலிதா ஜி’ எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பாப்புலரானார்.
இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான 90களின் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.