Trichy-Bahrain Flight: திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
Trichy to Bahrain Flight Service: விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் பறந்து பறந்து சேவையாற்றி வருகிறது.

தஞ்சாவூர்: வணக்கம் திருச்சி மக்களே உங்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறதுங்க. ஆமாங்க. திருச்சி - பஹ்ரைன் பறக்க நீங்க ரெடியாகிடலாம். ஏர் இந்தியா சார்பில் விரைவில் விமான சேவை தொடங்க இருக்குங்க.
திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் பறந்து பறந்து சேவையாற்றி வருகிறது.
கிழக்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் விமான சேவையானது அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு அதிகளவில் மக்கள் அனைவரும் பயணம் செய்கின்றனர். அந்தளவிற்கு திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காக செல்பவர்களும், தொழில் ரீதியாக பறப்பவர்களும் அதிகம் உள்ளனர். இதனால் திருச்சி சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருந்து கொண்டு இருக்கும்.
வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் அனைத்தும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மட்டுமே இயக்கி வருகிறது. வாரத்திற்கு துபாய், சார்ஜா போன்ற நாடுகளுக்கு 7 விமான சேவைகளும், அபுதாபிக்கு 3 விமான சேவைகளும், மஸ்கட், தமாம் நாடுகளுக்கு 2 சேவைகளும், குவைத், தோஹா போன்ற நாடுகளுக்கு தலா ஒரு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. ராசல் கைமா, பஹ்ரைன் மற்றும் ரியாத் போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இதுவரை இயக்கப்படவில்லை. இப்போ அந்த குறை திருச்சி மக்களுக்கு தீர போகுது.
வளைகுடா நாடுகளில் உள்ள 9 முக்கிய விமான நிலையங்களில் 6 விமான நிலையங்கள் திருச்சியுடன் விமான சேவை இயக்கப்படக்கூடிய நிலையில் மீதமுள்ள 3 விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் விமானத்தில் பயணம் செய்பவர்கள், தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகள் பறக்கும் தொழிலதிபர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருந்த நிலையில் ஜனவரி மாதம் 2-ந்தேதி முதல் தம்மாம் இடையே புதிய விமான சேவையானது தொடங்கப்பட்டு பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
பயணிகள் அதிகரித்துள்ளதால் இருக்கைகள் இல்லாமல் சென்னை, கொச்சி விமான நிலையங்களுக்கு சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை தற்போது இருந்து வருகிறது. இதனால் நீண்ட நாட்கள் காத்திருந்து திருச்சியில் இருந்து பலரும் வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில்தான் பயணிகளுக்கு அட்டகாசமான இனிப்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- பயணிகள் கோரிக்கையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமான சேவை அளிக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அனுமதிக்கு காத்திருக்கும் நிலையில், இந்திய விமான போக்குவரத்து ஆணையம் விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். கோடை கால அட்டவணையில் பஹ்ரைன் நாட்டுக்கு விமான சேவையானது இடம் பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகவல் திருச்சி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையம் தற்போது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பஹ்ரைனுக்கு விமான சேவை தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

