Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா... இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்
Ranjith : குழந்தைகளை பள்ளியில், கல்லூரியில் சேர்க்க, சொத்தை கொடுக்க என அனைத்திற்கும் பெற்றோரின் கையெழுத்து வேண்டும் ஆனால் பதிவு திருமணம் செய்து கொள்ள மட்டும் பெற்றோரின் கையெழுத்து தேவையில்லையா?
![Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா... இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித் Actor Ranjith speech at his kulanthai c/o goundampalayam trailer release event Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா... இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/17/c933e108c5f612eb36ae338641f3f6521705497077928224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
'பொன்விலங்கு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்தும் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ரஞ்சித் 7 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரை மூலம் என்ட்ரி கொடுத்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செந்தூர பூவே' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் அதை தொடர்ந்து தற்போது மிகவும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் இயக்குநராக வெள்ளித்திரை பயணத்தை துவங்கியுள்ளார் ரஞ்சித்.
நாடக காதலை மையமாக வைத்து பெண்பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பரிந்து பேசும் படமாக குழந்தை c/o கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் ரஞ்சித், ”கொங்கு மக்களின் கலாச்சாரம், பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வேதனையை உணர்த்தும் இப்படம் பிள்ளைகளின் காதலுக்கு எதிரானது அல்ல, அதை முறையாக செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு படம். பெண் பிள்ளைகளை பெற்று பெரும்பாடு பட்டு வளர்த்து அவர்களை கசாப்பு கடைக்கு அனுப்பும் நிலையில் தான் தற்போதைய காதல் இருக்கிறது. அதை எடுத்து சொல்லும் இப்படத்தை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள். கடந்த 7 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்தபோது சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் இப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.
பிள்ளைகளை வளர்த்து பெரிய ஆளாக்கி அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர் நினைக்கையில், பிள்ளைகளோ வீட்டுக்கு தெரியாமல் சார்பதிவாளர் அலுவுலகத்திற்கு சென்று ரகசிய திருமணம் செய்து கொள்ளும் அவலம் அரங்கேறி வருகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கல்லூரியில் சேர்க்க, சொத்தை கொடுக்க என அனைத்திற்கும் பெற்றோரின் கையெழுத்து வேண்டும் ஆனால் பதிவு திருமணம் செய்து கொள்ள மட்டும் பெற்றோரின் கையெழுத்து தேவையில்லையா? இது என்ன சட்டம். ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்வதற்கும் பெற்றோரின் கையெழுத்து அவசியம் என சட்டம் கொண்டு வரவேண்டும்.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சாதி சார்ந்த திரைப்படங்கள் ஏராளமானவை வெளியாகின்றன. சாதியை விற்று சினிமா செய்யும் அரசியலும் நிகழ்வதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில் பெண் பிள்ளைகளை காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாடக காதலில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக இப்படத்தை இயக்கியுள்ளேன். நிச்சயம் மக்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என பேசி இருந்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)