Jailer: சூப்பர்ஸ்டார் கொடுத்த குட்டி டிப்ஸ்.. தரமணி முதல் ஜெயிலர் வரை.. வசந்த் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்
ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார், தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் வசந்த்..
தரமணி , ராக்கி முதலிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. வளர்ந்து வரும் நடிகர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர்களில் வசந்த் ரவியும் ஒருவர். சினிமாவிற்குள் வருகை தந்து ஆறு ஆண்டுகளை கடந்துவிட்டிருக்கும் வசந்த் ரவி, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
நெல்சனின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இதனால்தான் நடித்தேன்...
தான் நடிக்கும் படங்களின் கதையைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்திவரும் வசந்த், ஜெயிலர் படத்தில் நடிக்க நினைத்ததற்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
“நான் ஜெயிலர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த காரணம், முதலில் அது நெல்சன் இயக்கும் படம் இரண்டாவது ரஜினிகாந்த் நடிக்கும் படம். என்னுடைய கதாபாத்திரம் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ரஜினிகாந்தின் அருகில் இருந்து அவரது அனுபவத்தைப் பார்த்து தெரிந்துகொள்வதே எனக்கு மிகப்பெரிய படிப்பினையாக இருக்கும் என்று நான் கருதினேன்.அதனால் இந்தப் படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன்” என்றார்
ரஜினி கொடுத்த டிப்ஸ்
ரஜினிக்கும் தனக்கும் நிகழ்ந்த ஒரு குட்டி உரையாடலையும் பகிர்ந்துகொண்டார் வசந்த். தனது இந்த வயதிலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. அவரின் மேல் இருந்த பிரம்மிப்பில், இதை அவரிடன் கேட்டிருக்கிறார் வசந்த். இதற்கு பல வருடங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொடுத்த ஒரு குட்டி டிப்ஸை வசந்திடம் பகிர்ந்துகொண்டார்.
வயது அதிகரித்துக்கொண்டு போகும்போது நமக்கு வயதாகிவிட்டது என நினைத்து, நாம் வீட்டில் இருந்துவிடக்கூடாது. வயது அதிகரிக்கும்போதுதான் நாம் நம்மை முடிந்த அளவிற்கு பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும். தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளத்தான் தான தொடர்ந்து நிறையப் படங்களை நடித்து வருவதாக கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
நெல்சன் மாதிரி ஹ்யூமர் பண்ணவே முடியாது
இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் வசந்த். “கமர்ஷியல் சினிமாவில் எதார்த்தத்திற்கு நெருக்கமானப் படங்களை இயக்குபவர் நெல்சன். கமர்ஷியல் சினிமா தான் என்றாலும் தேவையில்லாத ஒரு இடத்தில் ஒரு பாடலை அவர் வைக்கமாட்டார். ரஜினியின் வயதிற்கு எந்த மாதிரியான காட்சிகளை அமைக்க முடியுமோ அந்த மாதிரியான காட்சிகளையே அவர் வைப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரைப்போல் டார்க் காமெடி யாராலும் செய்ய முடியாது. தனது படங்களிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர் அந்த மாதிரி சிரிக்காமல் காமெடி செய்யக்கூடிய ஒரு நபர்தான். நெல்சனின் இந்த குணத்தைப் பார்த்து கற்றுக்கொள்வது எனக்கு புதிதாக இருந்தது’ என்று கூறினார் வசந்த்.
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், ஷிவராஜ் குமார் , ரெடின் கிங்க்ஸ்லி நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 10 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ஜெயிலர்.