Sports Films: வாழ்க்கை ஒரு போர்க்களம்: தமிழில் வந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் பற்றி கொஞ்சம் படிங்க..
விளையாட்டை மையக் கதையாக கொண்டு வெளியாகிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
தமிழ் சினிமாவில் விளையாட்டுகளை மையமாக வைத்து நிறையப் படங்கள் வெளிவருகின்றன.ஆனால் அவை பெரும்பாலும் யதார்த்தத்தில் இருந்து விலகி மிகையான சித்தரிப்புகளாகவே அதிகம் இருக்கின்றன.வெகு சிலப் படங்களே நேரமையாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அமைகின்றன.அந்த வகையில் விளையாட்டைக் குறித்து வெளிவந்த சிலப் படங்களைப் பார்க்கலாம்
வெண்ணிலா கபடிக் குழு
வெண்ணிலா கபடிக் குழு இயக்குனர் சுசிந்திரன் இயக்கியத் திரைப்படம்,விஷ்னு விஷால்,சூரி ,இயக்குனர் கிஷோர் சரண்யா மோகன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். ஒரு சின்ன கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் கபடி போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் ஊர்க் காரர்களோ குடும்பத்தினரோ யாரும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.இந்த விளையாட்டில் ஜெயிப்பதன் மூலம் தங்களது மரியாதையை எப்படியாவது மீட்டுக்கொள்ள வேண்டும் என்று போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.இதில் வரும் பிரச்சனைகளை அவர்கள் சமாளித்து அதே நேரத்தில் தங்கள் ஊர்க்காரர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
இறுதிச் சுற்று
சுதா கொங்காரா இயக்கிய இறுதி சுற்று வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருந்தது.குத்துச்சண்டையில் திறமை இருந்தும் பல்வேறு காரணங்களால் சாதிக்க முடியாமல் போன ஒருவர் மதி என்கிற ஒருவரிடம் அவளது திறமையைப் பார்த்து அவளுக்கு பயிற்சி அளிக்கிறார்.குத்துச் சண்டையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரிவாக பேசியப் படம் இறுதிச் சுற்று.
ஜீவா
சுசிந்திரன் இயக்கிய மற்றொருப் படம் ஜீவா.கிரிக்கெட்டை மையக் கதையாகக் கொண்டது.கிரிக்கெட்டை தங்களது லட்சியமாகக் கொண்டு விளையாடும் இளைஞர்கள் திறமை இருந்தும் நிராகரிக்கப் படுவதற்கு பின் இருக்கும் அரசியலை மிக நிதானமாக சித்தரித்தது ஜீவா.தங்களது லட்சியத்திற்காக இந்த இளைஞர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மாதிரியான சவால்களை கடந்து வருகிறார்கள் என்பதே ஜீவா படத்தின் கதை
சென்னை 28
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 விளையாட்டு குறித்தான திரைப்படங்களின் போக்கையே மாற்றியது என்று சொல்லலாம்.கிரிக்கெட் என்கிற ஆட்டத்திற்குள் இருக்கும் பல்வேறு நகைச்சுவைத் தருணங்களைக் கொண்டது இந்தப் படம்.
ஆடுகளம்
தமிழ் நிலத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் சேவல் சண்டையை மையக் கதையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆடுகளம்.விளையாட்டு என்கிற ஒன்றுக்குள் மனிதனின் கீழ்மைகள் எப்படி எல்லாம் பிரதிபலிக்கின்றன என்பதனை மிக நுணுக்கமாக சித்தரித்திருப்பார் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.
சார்பட்டா பரம்பரை
ஆங்கிலேயர்கள் தமிழர்களிடையே விட்டுச் சென்ற குத்துச் சண்டை விளையாட்டு தமிழர்கள் எவ்வளவு தீவிரமாக விளையாடிவந்தார்கள்.தமிழகத்தில் குத்துச்சண்டைப் போட்டி காலம் காலமாக இருந்து வருகிறது என்பதை அதற்குள் இருக்கும் கதாபாத்திரங்களின் வழி சொல்கிறது சார்பட்டா திரைப்படம்.