SS Chakravarthy Passes Away: பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார் - ரசிகர்கள் இரங்கல்
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
SS Chakravarthy Passes Away: தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்
நடிகர் அஜித்தின் தந்தை அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் காலமானதை அடுத்து, அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஏகே62 படத்தின் வேலை மும்முரமாக நடத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் நெருக்கமானவரும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி?
நடிகர் அஜித்தின் ஆரம்பக் கால படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் இவரை வைத்து பட தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இந்த சமயத்தில் தான் அஜித்தின் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.
இந்த படத்தை தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், காதல் சுடுகுடு, ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய படங்களை நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
இப்படி அஜித்தின் திரையுலக ஆரம்பக் காலத்தில் அஜித்துடன் கைக்கோர்த்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்தி அஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
மகனுடன் படம்
இதனை அடுத்து எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சிம்புவுடன் கைகோர்த்தார். அதன்படி, சிம்புவின் காளை, வாலு ஆகிய படங்களை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்தார். இதற்கிடையில், இவர் தன்னுடைய மகன் ஜானியை வைத்து இரண்டு படங்களை தயாரித்தார்.
அதில், 2009ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து, சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக பாதிலேயே நின்றது.
புற்றுநோய் பாதிப்பு
இதனால் படத் தயாரிப்பில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக கடுமையாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் இவர் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.