TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
கட்சியின் மூத்த நிர்வாகி தம்மை மிரட்டியதால் மனமுடைந்த சத்ய நாராயணன் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மூத்த நிர்வாகி மிரட்டலான தொனியில் பேசியதால் தவெக நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த சம்பவம் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
நாடு முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் அரசியல் கட்சியினர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக சத்ய நாராயணன் என்பவர் இருந்து வருகிறார். இவர் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.
சத்யநாராயணன் கிளைக் கழக நிர்வாகியாக இருக்கிறார். இவர் கிறிஸ்துமஸ் மற்றும் 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தனது பகுதியில் பேனர் ஒன்றை வைத்து இருக்கிறார். ஆனால் அந்த பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு என்பவரின் புகைப்படம் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த விஜய் பிரபு சத்யநாராயணனை தொடர்பு கொண்டு, ‘பேனரில் எனது புகைப்படம் எப்படி இல்லாமல் போகலாம்?’ என கேட்டு மிரட்டலான தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி
கட்சியின் மூத்த நிர்வாகி தம்மை மிரட்டியதால் மனமுடைந்த சத்ய நாராயணன் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சத்ய நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அங்கு உட்கட்சி பூசல் இருப்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைமையையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக நடவடிக்கை எடுக்குமா?
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியை தனக்கு வழங்காத நிலையில், பனையூரில் விஜய் காரை மறித்து அஜிதா ஆக்னஸ் என்ற பெண் நிர்வாகி போராட்டம் நடத்தினார். அவரிடம் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்படியான நிலையில் அஜிதா ஆக்னஸை சிலர் சமூக வலைத்தளங்களில் திமுக கைகூலி என விமர்சித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு முதல்முறையாக அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை சென்ற வண்ணம் உள்ளது.





















