Survivor: ‛படிச்சு படிச்சு சொன்னோமே கேட்டீயா...’ குழி பறித்த சரண், நாராயணன்... ஐஸ்வர்யா வெளியேற்றம்!
இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த நந்தா-அம்ஜத் ஜோடிக்கு ஒரே ஒரு எண்ணம் தான் ஓடியிருக்கும். ‛படிச்சு படிச்சு சொன்னோமே... கேட்டீயா... பாம்புக்கு பால் வார்த்துட்டீயே’
சர்வைவர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கிராண்ட் பினாளே வாரமாக இந்த வாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நந்தா, அம்ஜத், இனிகோ பிரபாகர், விக்ராந்த் ஆகியோர் வெளியேற்றப்பட்டு, தற்போது ஜூரியாக பங்கேற்று வருகின்றனர். இனி வெளியேற்றப்படுவோர், அதே பார்மட்டில் ஜூரியாக செயல்படுவார்கள் என்று சர்வைவர் விதிகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த இமினுட்டி ஐடல் டாஸ்க்கில், துவக்கத்திலேயே உமாபதி, சரண், நாராயணன் ஆகியோர் தாக்குபிடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா-விஜயலட்சுமி-வேனசா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் வேனசா வெற்றி பெற்று, இமினிட்டி ஐடியல் பெற்றார். இதன் மூலம் அவரை வெளியேற்ற முடியாது. நேற்று பரபரப்பான சூழலில் யார் வெளியேறப்போகிறார் என்பதை அறியும் ட்ரைபிள் பஞ்சாயத்து நடந்தது.
வழக்கமாக ஞாயிற்று கிழமை நடைபெறும் ட்ரைபிள் பஞ்சாயத்து, கிராண்ட் பினாளே காரணமாக முன்கூட்டியே நேற்று நடைபெற்றது. விஜயலட்சுமி-உமாபதிக்கு சண்டை, விஜயலட்சுமி-ஐஸ்வர்யாவுக்கு சண்டை, ஐஸ்வர்யா-சரணுக்கு சண்டை, சரணுக்கு-விஜயலட்சுமிக்கு சண்டை என ஒரே சண்டை மயமாக பஞ்சாயத்திற்கு வந்து சேர்ந்தார்கள் கொம்பர்கள். உமாபதியை வெளியேற்ற விஜயலட்சுமி திட்டமிட்ட என்கிற குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்தார் உமாபதி. அதற்கு விஜி மறுக்க, அவர் கூறியவற்றை சரண் மற்றும் வேனசா ஆகியோர் போட்டு உடைக்க, பஞ்சாயத்து உண்மையில் பஞ்சாயத்து ஆனது.
சரணை ஆதரித்ததால் ஒட்டுமொத்த காடர்கள் விரோதத்தை சம்பாதித்த ஐஸ்வர்யாவை, கடைசி நேரத்தில் நம்ப வைத்து கழுத்தறுத்தார் சரண். ஓட்டுக்காக உமாபதி, விஜயலட்சுமி, வேனசா உடன் இணைந்து அவர் நகர்த்திய காய்களும் அம்பலப்பட்டது. நாலாபுறமும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஐஸ்வர்யா உடைந்து போயிருந்தார். அனைவரிடத்திலும் போட்டு வாங்கிய அர்ஜூன், அவர்களை ஓட்டு போட அழைத்தார்.
மொத்தமுள்ள 6 ஓட்டுகளில் முதல் ஓட்டில் சரண் பெயர் இருந்தது. அடுத்தடுத்த 4 ஓட்டுகள் ஐஸ்வர்யாவுக்கு விழுந்தது. இதனால் கடைசி ஓட்டு எண்ணும் முன்பே ஐஸ்வர்யா வெளியேற்றத்தை அறிவித்தார் அர்ஜூன். இதில் அதிர்ச்சி என்னவென்றால், வேடர்கள் அணியில் இருந்த சரண், நாராயணன் ஆகியோரும் ஐஸ்வர்யாவுக்கு ஓட்டளித்திருந்தனர். அதே போல, விஜயலட்சுமியும், உமாபதியும் கூட ஐஸ்வர்யாவுக்கே வாக்களித்திருந்தனர்.
வேனசா ஓட்டு எண்ணப்படவில்லை. எண்ணியிருந்தாலும் அதுவும் ஐஸ்வர்யா என்றே இருந்திருக்கும். ஏனென்றால், ஐஸ்வர்யாவை வெளியேற்றுவது தான் முக்கியம் என நேற்று முன்தினம் நடந்த டாஸ்கில் வேனசா பகிரங்கமாகவே தெரிவித்தார். கொம்பர்களாக ஒருங்கிணைக்கப்பட்ட போதும், காடர்கள் அணிக்கு வேடர்கள் அணியை ஒழிக்க வேண்டும், நாம் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது.
அதை தான் அவர்கள் தொடர்ந்து செய்தும் வந்தனர். இதில் கொடுமையான விசயம், வேடர்கள் அணியில் அந்த ஒற்றுமை துளி கூட இல்லை. அதில் நந்தா, அம்ஜத் கொஞ்சம் விதிவிலக்கு. நாராயணனும், சரணும் தான் சுயநல செயல்பாட்டாளர்கள் என்பது நேற்றை எபிசோட்டில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்த டாஸ்கிலும் உருப்படியாக விளையாடாத நாராயணனை கடைசியை கொண்டு வந்ததில், வேடர்கள் அணிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், அவர், கடந்த சில வாரங்களாகவே இனிகோ உடன் நெருக்கமாக இருந்து தன்னை பாதுகாக்க முயற்சித்தார்.
இருபுறமும் கால் வைத்து, தன்னை பாதுகாத்துக் கொண்டார். நேற்று காடர்கள் திட்டப்படி ஐஸ்வர்யாவுக்கு ஓட்டளித்தார்.நாராயணன் இப்படியென்றால், சரண்... அதுக்கும் மேலே. ஒவ்வொரு முறையும் சரண் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது, அதை பொருட்படுத்தாமல் ஐஸ்வர்யா குருட்டுத்தனமாக அவரை ஆதரித்தார். ஆனால், மெஜாரிட்டிக்காக காடர்கள் அணியோடு சேர்ந்து, திட்டமிட்டு ஐஸ்வர்யாவை காலி செய்ததில் சரண் மீதான கடந்த கால விமர்சனங்கள் அனைத்தையும் அவரே உறுதி செய்தார்.
நடந்த அனைத்தையும், ஜூரிகளான நந்தா-அம்ஜத்-விக்ராந்த்-இனிகோ ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தார். உமாபதி, நாராயணனுக்கு ஓட்டு போட இருந்ததாக கூறிய நிலையில், ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்கிற மாதிரி மனநிலைக்கு அவரை தள்ளும்படியான பேச்சை விக்ராந்த் பேசினார். ‛தான் வெளியேறிய போது இருந்ததை விட இதை பார்க்கும் போது மனக்கவலையாக இருப்பதாக,’ உமாபதி-விஜயலட்சுமி சண்டையின் போது குறிப்பிட்டார் விக்ராந்த். இறுதியில் அவர்கள் நினைத்தது நடந்தது, ஆம்... கடும் போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா... நேற்று வெளியேற்றப்பட்டு, ஜூரியில் இணைந்தார்.
இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த நந்தா-அம்ஜத் ஜோடிக்கு ஒரே ஒரு எண்ணம் தான் ஓடியிருக்கும். ‛படிச்சு படிச்சு சொன்னோமே... கேட்டீயா... பாம்புக்கு பால் வார்த்துட்டீயே’ என்பது போல் தான் ஐஸ்வர்யாவை அவர்கள் பார்த்தனர். தற்போது காடர்கள் அணியில் விஜயலட்சுமி-வேனசா-உமாபதியும், வேடர்கள் அணியில் நாராயணன்-சரண் ஆகியோர் கொம்பர்களாக இணைந்துள்ளனர். அடுத்த வெளியேற்றத்தில் அநேகமாக சரண் அல்லது நாராயணன் இருக்க வாய்ப்புள்ளது.