”அய்யோ அங்கிள், நடிக்கவெல்லாம் வரமாட்டேன்னு” - சூர்யா சீக்ரெட்ஸ் சொன்ன பாக்யராஜ்..
ஆனால் பாக்கியராஜ் கேட்ட ஆறு மாத கால இடைவெளியிலேயே அவர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்
சூர்யா :
1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா . அதன் பிறகு காதலே நிம்மதி , பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். அந்த படங்கள் அனைத்தும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மேலும் சூர்யாவின் நடிப்பும் , நடனமும் சக நடிகர்களாலேயே விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் துவண்டு போகாதா சூர்யா தொடர்ந்து அதற்காக கடுமையாக உழைத்தார். என்னதான் தந்தை முன்னணி சினிமா நாயகனாக இருந்தாலும் , சூர்யா இன்று பிடித்திருக்கும் அங்கீகாரம் அவரது சொந்த முயற்சி என்றால் மிகையில்லை.
கோலிவுட் சினிமாவில் தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் கமல்ஹாசன் , விக்ரம் வரிசையில் சூர்யாவுக்கும் எப்போதும் இடம் உண்டு. கதாபாத்திரங்களுக்காக அத்தனை மெனக்கெடல்களை செய்வார் சூர்யா. அந்த விடா முயற்சிதான் இன்று சூர்யாவிற்கு தேசிய விருது என்ற அங்கீகாரத்தையும் , மக்களின் நாயகன் என்ற அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது.
நடிப்பில் நாட்டமில்லாத சூர்யா :
சிறு வயது முதலே அமைதியாகவும் , கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்தவர் சூர்யா. அதனை நடிகர் சிவக்குமாரும் , சூர்யாவின் அப்பாவுமான சிவக்குமாரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்த சூர்யா படிக்கும் காலத்தில் நிறைய அரியர்ஸ் வைத்திருந்தாராம் . அதையெல்லாம் மிகுந்த சிரமப்பட்டுதான் கிளியர் செய்திருக்கிறார். மேற்கொண்டு எம்.காம் படி என அப்பா சிவக்குமார் கேட்க , இதற்கு மேல் படிக்க சொன்னால் வீட்டை விட்டு ஓடிவிடுவேன் என்றெல்லாம் பயம் காட்டியிருக்கிறார். அவருக்கும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்திருக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது நடிகர் பாக்கியராஜ் வீட்டிற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்ற சூர்யாவை பார்த்த அவர், உனக்கு ஹீரோவிற்கான அத்தனை கலையும் இருக்கிறது. அப்பாவைப்போல் நீயும் ஏன் நடிக்க கூடாது என கேட்க, ஆனால் சூர்யா ”அய்யய்யோ அங்கிள் எனக்கு சினிமாவெல்லாம் வேண்டாம் “ என பதற்றமாகியிருக்கிறார். உடனே பாக்கியராஜ் “ ஒரு இயக்குநரின் பார்வையில் கூறுகிறேன், என்னதான் ஆர்டிஸ்ட்டின் மகனாக இருந்தாலும் இப்படியான தோற்றத்தில் இருப்பது அரிதுதான். நடிக்கலாமே “என்றாராம் .
ஆனால் சூர்யா இல்லை வேண்டாம் அங்கிள் என மீண்டும் மீண்டும் பிடிவாதமாக கூறியிருக்கிறார். ஆனால் பாக்கியராஜ் கேட்ட ஆறு மாத கால இடைவெளியிலேயே அவர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்கிறார் பாக்கியராஜ்.
View this post on Instagram