Rajinikanth: ரஜினி சொன்ன பதிலை கேட்டு சோகமான தேவா.. உண்மையை உடைத்த சுரேஷ் கிருஷ்ணா ..!
பாட்ஷா படத்தில் இடம் பெற்ற அழகு பாடல் தேவையில்லை என ரஜினிகாந்த் சொன்ன காரணம் என்ன, பிறகு அந்த பாடல் எப்படி படத்தில் இடம்பெற்றது என்பது குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது 1995ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா" திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ் என் ஏராளமானோர் நடித்த இப்படம் ஓராண்டை கடந்து திரையரங்குகளில் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை எக்கச்சக்கமான கூஸ்பம்ஸ் மொமெண்ட்ஸ். ரஜினியின் உச்சக்கட்ட ஸ்டைல், அதிரடியான பஞ்ச் வசனங்கள் என ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஒரு திரைப்படம்.
தேவாவின் இசை :
பாட்ஷா திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி திரை ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது. படத்திற்கு கூடுதல் மைலேஜ் கொடுத்து சூப்பர் ஸ்பீடில் எகிற வைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் தேனிசை தென்றல் தேவா. அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்று வரை கொண்டாடப்படும் சூப்பர் ஹிட் பாடல்கள்.
அழகு பாடல் உருவான கதை :
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா படத்தின் இனிமையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அழகு பாடல் உருவான அந்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்து இருந்தார். ரஜினி தேவாவிடம் வந்து இந்த பாட்டு நிஜமாவே ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆனால் படத்தில் இந்த பாட்டுக்கு இடம் இல்லை. ஏற்கனவே இரண்டு டூயட் பாடல்கள் இருக்கு.
அதனால இந்த பாட்டை படத்தில் இருந்து தூக்கிவிட்டு கேசட்டில் மட்டும் வைக்கலாம் என கூறிவிட்டார். தேவாவின் முகம் அப்படியே வாடி போனது. இருந்தாலும் எனக்கு மனசு தான் ஒரு மாதிரி நெருடலாகவே இருந்தது. பாட்டு ரொம்ப சூப்பராக இருந்தது. அதனால் இதை எப்படியாவது வைத்தே தான் ஆக வேண்டும் என யோசித்தேன். கண்டிப்பா ஹிட்டாகும் என நினைச்சேன்.
ஒரு வாக்கிங் சென்று வருகிறேன் என கூறிவிட்டு யோசித்து கொண்டே சென்றேன். வந்ததும் ரஜினி சாரிடம் ஒரு ஐடியா சொன்னேன். இந்த மாணிக்கம் ஜிம்முக்கு போறான். அங்கு உடற்பயிற்சி செய்வது மாணிக்கம். வெளியில் வந்தால் செக்யூரிட்டி மாணிக்கம் என சொன்னதும் ரஜினி சார் உடனே இரு என சொல்லிவிட்டு வெளியில் வந்தால் கார் டிரைவர் மாணிக்கம், சாமி ஊர்வலம் வருகிறது அங்கு நாதஸ்வரம் வாசிப்பவரும் மாணிக்கம், பல்லவன் பஸ் வருகிறது அதில் கண்டக்டரும் மாணிக்கம் என அவரே அடுத்தடுத்து இன்ட்ரெஸ்ட் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் காஸ்டியூம், லொகேஷன் என எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டாங்க. பத்தே நிமிஷத்தில் பாடல் முழு கான்செப்டும் ரெடியாகிவிட்டது. பாட்டு வேண்டாம் என சொன்னார் இப்போ அவரே இவ்வளவு இன்ட்ரெஸ்ட் காண்பிக்கிறார் என்பது சந்தோஷமாக இருந்தது. இந்த பாடல் ஓகே ஆகிடும் என நம்பிக்கை வந்தது.