2 years of Annaatthe: அரசியலுக்கு நோ சொன்ன சூப்பர் ஸ்டாரின் முதல் படம்... சென்டிமென்ட்டில் உருக வைத்த 'அண்ணாத்த'!
2 years of Annaatthe: அரசியலில் சூப்பர் ஸ்டார் இறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசியலுக்கு நான் வரப்போவதில்லை என அவர் கூறிய பிறகு வெளிவந்த முதல் ரஜினிகாந்த் படம் 'அண்ணாத்த'!

அண்ணன்- தங்கை சென்டிமென்ட் படங்கள் ஒன்றும் தமிழ் சினிமாவுக்கும் புதிதல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் புதிதல்ல. அந்த வகையில் முள்ளும் மலரும் படத்தில் காளி - வள்ளியாக தூள் கிளப்பிய ரஜினிகாந்த் படம், தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் பேசப்படுகிறது. அந்த வரிசையில் அண்ணனாக ரஜினிகாந்தும் தங்கையாக கீர்த்தி சுரேஷூம் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தீபாவளி ரிலீஸ்
தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக 1995ஆம் ஆண்டு வெளியானது ரஜினிகாந்தின் 'முத்து' படம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளிக்கு வெளியான சூப்பர் ஸ்டார் திரைப்படம் 'அண்ணாத்த' என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
அண்ணன் - தங்கை பாசம்
தங்கையின் மேல் உயிரையே வைத்து இருக்கும் அண்ணன், அவளின் நலனுக்காக அரிவாள் தூக்கும் பழைய மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், ரஜினியின் ஆக்ஷன் சீக்வன்ஸ் ரசிகர்களைக் கவர்ந்தது. டி. இமானின் இசையும் படத்தை சற்றுத் தூக்கி நிறுத்தியது. நயன்தாராவுக்கு ஒரே ஒரு டூயட் சாங் மட்டும் கொடுத்து ஊறுகாய் போல பயன்படுத்தி இருந்தனர்.
பலம் சேர்ந்த நடிகர்கள்
கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கொல்கத்தாவில் கணவரைக் காப்பாற்ற போராடும் இடங்களில் எல்லாம் உருக வைத்தார். ஜெகபதி பாபு அழுக்கு சட்டையில் வந்தாலும் தேவையான வில்லத்தனத்தை சிறப்பாக கொடுத்து இருந்தார். மீனா, குஷ்பூ ரஜினிக்காக போட்டி போடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பழைய பிளாஷ்பேக் படங்கள் எல்லாம் நினைவில் வந்து சென்றன. பிரகாஷ்ராஜ் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
திருமணத்திற்கு முதல் நாள் தங்கையை காணவில்லை என தெரிந்த போது அவர் பதறுவதும், தங்கை காதலனுடன் ஓடிப்போய்விட்டாள் என தெரிந்த பின்னர் உடைந்து போகும் இடத்திலும் கண்கலங்க வைத்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.
எஸ்.பி.பி கடைசி சாங்
ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலான ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் பெப்பியான பாடலாக அமைந்தது. தங்கம் தங்கம், சார சார காற்றே, வா சாமி, மருதாணி என அனைத்து பாடல்களுமே ஹிட் பாடல்களாக வரவேற்பை பெற்றன.
பாராட்டும் விமர்சனமும்
வழக்கம் போல ஆக்சன் காட்சிகள் முழுவதும் வீச்சரிவாள், இரும்பு சங்கிலி, இரும்பு ராடு, பாம் வைத்து வெடித்து சிதறும் வாகனங்கள் என ரசிகர்களை சலிப்பு தட்ட வைத்தது. செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆனாலும் இணையவாசிகள், இன்றைய தலைமுறையினர் மத்தியில் ட்ரோல்களை சம்பாதித்து பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
அரசியலுக்கு நோ!
அரசியலில் சூப்பர் ஸ்டார் இறங்குவார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசியலுக்கு நான் வரப்போவதில்லை என திட்டவட்டமாகக் கூறிய பிறகு வெளிவந்த முதல் ரஜினிகாந்த் படம் 'அண்ணாத்த'!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

