Sudha Kongara SooraraiPottru : சூர்யாவோட கண்ணு பொய் சொல்லாது.. வார்த்தை பொய்யாகாது - நெகிழ்ந்த சுதா கொங்கரா
சூர்யாவோட கண்ணு பொய் சொல்லாது.. வார்த்தை பொய்யாகாது என ஒரு நேர்காணலில் நெகிழ்ந்துள்ளார் சுதா கொங்கரா
பலரையும் கனவு காணத்தூண்டிய சூர்யாவின் சூரரைப்போற்று 5 தேசிய விருதுகளைச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. ’வெறும் பொண்ணு, அவளால என்ன செய்ய முடியும்’ என்று தன்னைப் பற்றிப்பேசிய சினிமாக்காரர்களை இப்போது நினைத்து சிரிக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
சுதா கொங்கரா சொன்ன விஷயத்தை இனி அந்தச் ’சினிமாக்காரர்களால்’ மறந்துவிடமுடியாது. “Dont call me woman director. Call me director"
சினிமா ஆர்வலர் ஸ்ரீதர் பிள்ளையுடன் தனியார் யூ டியூப் சேனல் நேர்காணலில் பேசிய சுதா, மிக முக்கியமான இரண்டு விஷயங்களை பேசியிருக்கிறார். சமூக ஊடகங்களில் அனைவரும் ஊர்வசிக்கு தேசிய விருது கிடைத்திருக்கவேண்டும் என்று பேசுகிறார்கள் என்று சொன்னதும், அதை உற்சாகமாக ஆமோதித்த கொங்கரா, “ஊர்வசி நடிக்கவில்லை. வாழ்ந்தார். அவருக்கு விருது கிடைத்திருக்கவேண்டும் என்றுதான் நானும் நினைத்தேன்” என்றார்.
சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கொங்கரா சொன்ன முக்கியமான இன்னொரு விஷயம் இதுதான். “சூர்யாவின் கண்கள் பொய் சொல்லாது. அவர் வார்த்தைகள் பொய்க்காது. அவனை நான் பறக்கவைக்கணும்னு ஒரு ஜனாதிபதியிடம் சொல்லும் சூர்யா வார்த்தைகள் உங்களுக்கு அதை உணர்த்தும்” என்றார்.
இயக்குநர் சுதா கொங்குரா மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். தொடர்ந்து கடந்த 2010ல் வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்தடுத்து இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டவர்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறிய வீடியோ இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த சந்திப்பில், இறுதிச்சுற்று படம் எடுத்தப்போ "இவங்கல்லாம் ராயபுரத்த எப்படி படம் எடுக்க போறாங்க, இந்த பொண்ணுக்கு ராயபுரம் பத்தி என்ன தெரியும் என்று ஒரு இயக்குநர் பேசினார். இந்த படத்தில் மாதவன் கதாபாத்திரம் கூறுவதுபோல், நீயெல்லாம் வீட்ல உக்காந்து துணி துவைக்கதான் லாயக்கு'ன்னு சொன்னாரு. 'கமெர்ஷியல் இல்ல, இது இங்க ஓடாது, இந்தில ஓடும், இந்தி கண்டெண்ட்ன்னு சொன்னாங்க சில பேர். யார் இத முடிவு பண்றது இந்தி கண்டெண்ட், தமிழ் கண்டெண்ட், மலையாளம் கண்டெண்ட்ன்னு. 'பி, சி சென்டர்ஸ்ல சுத்தமா போகாது, ஏ சென்டர்ல போடலாம், அதுவும் மல்டிப்ளெக்ஸ்ல மட்டும்தான் நல்லா ஓடும், சத்தியம்ல போடலாம், நல்ல போகும்ன்னு சொன்னாங்க" என்று படத்தை பற்றி முன்முடிவு செய்பவர்களை குறித்து அதில் விளாசியிருந்தார் கொங்கரா