8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
பராசக்தி படத்திற்காக தனக்கு 8 கோடி சம்பள பாக்கி இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது இயக்குநர் சுதா கொங்காரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படம் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் திரையரங்குகளில் வெளியான பிறகு படம் எதிர்பார்த்த அளவிலான வசூலைப் பெறத் தவறியது. இந்த நிலையில், படத்துக்கான சம்பள பாக்கி தொடர்பாக சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு
சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில், பராசக்தி திரைப்படத்திற்காக ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ₹8.39 கோடி சம்பளம் இதுவரை செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அந்தத் தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், சம்பளப் பாக்கி விவகாரம் தீர்க்கப்படும் வரை படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமையை பயன்படுத்தவோ அல்லது ஒளிபரப்பவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கோரியுள்ளார். மேலும், அதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமான இதயம் முரளி திரைப்படத்தை ஜூலை 10-ஆம் தேதி வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் வரை பராசக்தி திரைப்படத்தின் செயற்கைக்கோள் வெளியீட்டை முன்னெடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்துள்ளது.
பராசக்தி பட்ஜெட் மற்றும் வசூல்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவான பராசக்தி திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவானது. படத்தின் பட்ஜெட் காரணமாக இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு ஷேர் அடிப்படையில் சம்பளம் பேசப்பட்டது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றால் லாபத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் பராசக்தி திரைப்படம் உலகளவில் மொத்தமே 84 கோடி மட்டுமே வசூல் செய்து பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டமாகவே அமைந்தது. பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில் சுதா கொங்காரா பேசிய சம்பளத்தை குறைக்க வேண்டும் என சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.
அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு சிக்கல்
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை வெளியிடக் கூடாது என சுதா கொங்காரா நீதிமன்றத்தை அனுகியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் அதர்வா நடிப்பில் வெளியாக இருந்த இதயம் முரளி படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது சுதா கொங்காராவின் சம்பள பாக்கியை கொடுத்தால் மட்டுமே இதயம் முரளி படத்தை வெளியிட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















