Parasakthi: "எதிர்நீச்சல் முதல் அமரன் வரை" தொட்டதெல்லாம் ஹிட்டு! SKவிற்கு புது உச்சமா பராசக்தி?
சிவகார்த்திகேயன் இதுவரை வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகளில் நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பராசக்தியும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய் திரையுலகில் இருந்து விலகிய பிறகு அவரது இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை ஏற்கனவே மெகா ஹிட் ஆகிய திரைப்படங்களின் பெயர்களில் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ஆகும். அதன் பட்டியலை கீழே காணலாம்.
எதிர்நீச்சல்:
சிவகார்த்திகேயன் முழுமையாக கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் எதிர்நீச்சல். 1968ம் ஆண்டு வெளியான நாகேஷின் எதிர்நீச்சல் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ஆகும். அதே தலைப்பில் மாறுபட்ட கதையுடன் வெளியான சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் மாபெரும் வெற்றி பெற்றது.
காக்கி சட்டை:
சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் காக்கிச் சட்டை. கமல்ஹாசன் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காக்கி சட்டை. இதே தலைப்பில் வெளியான இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.
வேலைக்காரன்:
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலைக்காரன். 1987ம் ஆண்டு வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றாகும். இதேபெயரில் 2017ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உழைப்பாளர்களின் வலிகளை பேசும் படமாக அமைந்தது.
மாவீரன்:
ரஜினிகாந்த் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான படம் மாவீரன். மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. ரஜினியின் வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தின் இதே தலைப்பில் 2023ம் ஆண்டு வெளியான படம் மாவீரன் படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த படம் அவரது திரைவாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது.
அமரன்:
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் மிகவும் முக்கியமான படம் அமரன். 1992ம் ஆண்டு வெளியான இந்த படம் கார்த்தியின் முக்கியமான படமாக தென்மாவட்டங்களில் திகழ்கிறது. இதே தலைப்பில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் திரைவாழ்வை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.
பராசக்தி:
சாதாரண மக்களுக்கான தமிழ் சினிமா தொடங்கிய படமாக பராசக்தி படத்தையே பலரும் குறிப்பிடுவார்கள். கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் முதன்முறையாக திரையில் அறிமுகமான இந்த படம் காலத்திற்கும் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது, இதே தலைப்பில் தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மையக்கருவில் உருவாகும் படத்திற்கு பராசக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகளில் களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நிலையில், இந்த படத்திலும் வெற்றி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.






















