பாதியில் நின்ற மாநாடு படப்பிடிப்பு...சிவகார்த்திகேயனுக்கு கைமாறிய கதை...நடிக்க மறுத்தது ஏன் ?
மாநாடு படப்பிடிப்பு பாதியில் நின்றதால் அந்த படத்தின் கதை தனக்கு வந்ததாகவும் அதை தான் மறுத்துவிட்டதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

பராசக்தி படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். வெங்கட் பிரபு முன்னதாக இயக்கிய மாநாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது பராசக்தி. தொடர்ச்சியாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து தான் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து உருவாகி வருகிறது. தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை மாநாடு படத்தில் இருந்தே நடந்து வருவதாக சிவகார்த்திகேயன் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
மாநாடு படத்தில் சிவகார்த்திகேயன்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே சூர்யா நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் மாநாடு. டைம்லூப் வைத்து விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவான இப்படம் நீண்ட காலத்திற்கு பின் சிம்புவிற்கு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களுக்காக பாதியில் தடைபட்டது. படப்பிடிப்பின் போது கொரோணா தொற்று பரவியதாகவும் , சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வராததாலும் படப்பிடிப்பு தடைபட்டதாக காரணங்கள் கூறப்படுகின்றன. சிம்புவை வைத்து படப்பிடிப்பை தொடர முடியாத படக்குழுவினர் சிவகார்த்திகேயனை வைத்து மீதி படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் மறுத்தது ஏன் ?
இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறுகையில் " சிம்பு இனிமேல் படத்தில் நடிக்க மாட்டார் என முடிவு செய்த படக்குழுவினர் என்னை இந்த படத்தில் நடிக்கச் சொன்னார்கள். எனக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. இந்த படம் எப்போது எடுத்தாலும் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும். சிம்புவை வைத்து தான் இந்த படத்தை தொடங்கினீர்கள் . அவரே நடிக்கட்டும். நாம் வேறு படத்தில் பணியாற்றலாம் என்று நான் வெங்கட் பிரபுவிடம் சொன்னேன்" என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.





















