Maaveeran Release: படம் வரதுக்கு முன்னாடியே எப்படிடா விமர்சனம்... யூட்யூப் சேனல்களை கலாய்த்து தள்ளிய சுரேஷ் காமாட்சி!
“மாவீரன் படத்துக்கு முதல் ரிவ்யூ இதோ” என, முதல் காட்சி முடியும் முன்னரே சில யூட்யூப் சானல்கள் போலியான வீடியோக்களைப் பகிர்ந்துள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் ரசிகர்களை அவரது ஏமாற்றிய நிலையில், மாவீரன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மண்டேலா படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்த பரத் சங்கர் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் “போன படத்துல மிஸ் ஆகிடுச்சு, இந்தப் படத்துல ஆகாது” என சிவகார்த்திகேயன் பேசியிருந்தது பலருக்கும் இப்படத்தின் மேலான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்துக்கு இணையத்தில் விமர்சனங்கள் ஏற்கெனவே வெளிவரத் தொடங்கிவிட்டன. இப்படத்தின் இன்றைய முதல் காட்சி 9 மணிக்கே சென்னையில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முதல் ஷோ நிறைவடைவதற்கு முன்பே ‘படத்தின் விமர்சனம் இதோ!’ என உற்சாகத்துடன் வீடியோ பகிர்ந்துள்ள யூட்யூப் தளங்களைக் கலாய்த்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார்.
ஒரு ஒரு திரைப்படம் வெளியாகும்போதும் செய்தி சேனல்கள் தொடங்கி பிரபல யூட்யூப் சானல்கள் வரை முதல் ஷோ முடிந்து வரும் ரசிகர்களிடம் பப்ளிக் ரிவ்யூ பெறுவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக “மாவீரன் படத்துக்கு முதல் ரிவ்யூ இதோ” என, முதல் காட்சி முடியும் முன்னரே சில யூட்யூப் சானல்கள் போலியான வீடியோக்களைப் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் இந்த சேனல்களை கடுமையாக சாடியும் கலாய்த்தும் பதிவிட்டுள்ள சுரேஷ் காமாட்சி, “எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா” எனப் பதிவிட்டுள்ளார்.
எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா @tfapatn @ThenandalFilms @iamarunviswa #maaveeran pic.twitter.com/RBqpnQqfMF
— sureshkamatchi (@sureshkamatchi) July 14, 2023
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, மிக மிக அவசரம், கங்காரு உள்ளிட்ட கோலிவுட் படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.