Sivakarthikeyan : அட இந்த காம்பினேஷன் புதுசா இருக்கே...சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகும் நீலாம்பரி...
Sivakarthikeyan : சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் அவரின் அம்மாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று இன்று முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய கடுமையான உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார். தன்னுடைய படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'அமரன்'. இப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
முன்னாள் இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இது முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பதால் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்கள் அவரின் லைன் அப்பில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டான் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணி சேரும் இப்படம் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திலும் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார் என்பது தான் அந்த புதிய அப்டேட். இவர்கள் இருவரின் காம்பினேஷன் இதுவரையில் எந்த படத்திலும் இருந்ததில்லை. இது தான் முதல் படம் என்பதால் ரசிகர்களுக்கு இது புது அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.