Bhavatharini: பவதாரிணிக்கு 4-வது ஸ்டேஜ் புற்றுநோய்: ஒரு மாசம் முன்னாடிதான் தெரியும்.. உறவினர் விலாசினி சொன்ன தகவல்
“கேன்சர் நுரையீரல் வரை முழுவதுமாகப் பரவி விட்டது என்று கூறினார்கள். பவதாரணிக்கு நாங்கள் இதை முதலில் சொல்லவில்லை. அவர் மருத்துவர் மூலமாகவே கொஞ்சம் தெரிந்து கொண்டார்”
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமான செய்தி தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் இசை உலகினை தன் வசீகரமான குரலால் ஆட்கொண்டு, பல்வேறு விருதுகளைக் குவித்துள்ள பவதாரணியின் இழப்பு ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சைக்காக பவதாரணி அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், பவதாரணியை புற்றுநோய் தாக்கியது பற்றி தங்களுக்கு ஒரு மாதம் முன்னரே தெரிய வந்ததாகவும், 4ஆவது ஸ்டேஜில் தான் கேன்சர் குறித்து அறிந்து கொண்டதாகவும் அவரது உறவினர் விலாசினி கவலையுடன் பகிர்ந்துள்ளார். இளையராஜாவுடைய மனைவி ஜீவாவின் சகோதரன் மகளும் நடிகையுமான கருணா விலாசினி இதுபற்றி கூறியுள்ளதாவது:
"குடும்ப நண்பர்களுக்கு மட்டும் ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு 4ஆவது ஸ்டேஜ் கேன்சர் என்பது தெரியும். அவருக்கு டீஹைட்ரேஷன் என்று சொல்லிதான் முதலில் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அதுக்கு அப்புறம் தான் பரிசோதனை செய்த பிறகு அவருக்கு 4ஆவது ஸ்டேஜ் கேன்சர் எனத் தெரிய வந்தது. எல்லாரும் சொன்னபோது எங்களுக்கு ஒன்னுமே புரியல. “பவதாரணிக்கு ஏற்கெனவே பித்தப்பையில் புற்றுநோய் தொற்று வளர்ச்சி இருந்தது. அதை பித்தப்பை கல் என நினைத்துக் கொண்டார்களா எனத் தெரியவில்லை. அவங்க பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்” என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
அதற்கு பின் கேன்சர் நுரையீரல் வரை முழுவதுமாகப் பரவி விட்டது என்று கூறினார்கள். பவதாரணிக்கு நாங்கள் இதை முதலில் சொல்லவில்லை. அவர் மருத்துவர் மூலமாகவே கொஞ்சம் தெரிந்து கொண்டார். இவ்வளவு விளக்கமாக எல்லாம் அவர் தெரிந்துகொள்ளவில்லை.
சென்ற ஆண்டு நாங்கள் கொலுவுக்கு சென்றிருந்தோம், பவதாரணி ஏற்கெனவே ஒல்லியாக இருப்பார். அப்போது இன்னும் ஒல்லியாக இருந்தார். ஏன் இப்படி இருக்கிறாய் என என் அம்மா கேட்டதற்கு “டயட்ல இருக்கேன்” என்றார். அப்போது என் அம்மா நன்றாக சாப்பிட சொன்னார்.
அந்தக் கச்சேரியின்போது அவருடன் நான் கடைசியாகப் பாடினேன். இப்போதுமே சிகிச்சைக்காக இலங்கை கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொன்னபோது, நாங்க இது கொஞ்சம் தள்ளிப்போடும், அவரை காப்பாற்றும் என நினைத்தோம். ஜனவரி முதல் வாரத்தில் தான் இலங்கை சென்றார்கள். நாங்கள் கேள்விப்பட்டவரை சிகிச்சை இன்னும் தொடங்கவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவர் இரண்டு ஆண்டுகளாவது இருப்பார் என நினைத்தோம். இளையராஜா கொழும்புவில் நடக்கும் தன்னுடைய கான்சர்ட்டுக்காக சென்றுள்ளார். கார்த்திக் ராஜா குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். இளையராஜா மிகவும் உடைந்துவிட்டார். இந்தத் தகவல் தெரிஞ்சபோது இது பெரிய ஷாக். தேத்திடுவாங்கனு பவதாரணியும் நினைச்சாங்க” எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பவதாரணியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.