(Source: ECI/ABP News/ABP Majha)
Prabhu Solomon on Sembi : “ ‘முள்ளும் மலரும்’ மாதிரி எடுக்க முயற்சி பண்ணிருக்கோம்” - மேடையில் எமோஷனல் ஆன பிரபுசாலமன்!
80 ,90 களில் அந்த உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் கொடுத்த தாக்கத்தை கொடுப்பதற்கு ஒரு முயற்சி எடுத்துள்ளோம்
தனது நகைச்சுவை ஆற்றல் மூலம் நம்மை சிரிக்க வைத்து, நம்மிடையே பரிட்சையமானவர் கோவை சரளா. நகைச்சுவை மட்டுமே இவருடைய பிரத்யேகம் கிடையாது; எமோஷனல் கதாபாத்திரம் மூலமும் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அவர், திரையரங்கத்தில் நம்மை கலங்க வைப்பதற்காக செம்பியாக நாளைக்கு திரைக்கு வருகிறார்.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' திரைப்படத்தில் கோவை சரளா உட்பட 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் குமார்,தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்; இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' வாங்கியுள்ளது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவர இருக்கும் நிலையில், படகுழுவினர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் வெகு தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில், இத்திரைப்படத்தின் பிரிமியர் திரையிடல் இன்று வடபழனி பிரசாத் லேப்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன்,"இத்திரைப்படத்தின் மேக்கிங்கிற்காக கவனித்து கடினமாக உழைத்திருக்கிறோம். 2 மணி நேரம் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் திரைப்படத்தை பார்க்க வைப்பதற்கு படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம்.
கடினமாக உழைத்தோம் என்று சொல்லக் கூடாது ,ஏனென்றால் இது நம் கடமை.திரைப்படத்திற்காக செலவழித்த பணத்தை திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.குறிப்பாக கோவை சரளா தனது 60 வயதில் இத்திரைப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு பெரியது; கோவை சரளா இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் தான் அவர் தன்னை முழுமையாக ஒப்படைத்து நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் இவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம்.
கதைக்கு அர்ப்பணிப்போடு வேலைகளை பார்த்தார்; இது மட்டுமின்றி,தம்பி ராமையாவும் அஸ்வினும் கொடுத்த ஒத்துழைப்பும் பெரியது; அஸ்வினிடம் இத்திரைப்படத்தில் நீங்கள் 27 பயணிகளில் ஒருவராக தான் வருவீர்கள் எனக் கூறினேன்.கடைசி சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார்.ஒரு விஷயத்தை உட்கார்ந்து பேசினால் தீராத பிரச்சினை எதுவும் கிடையாது என அவர் நினைத்து வேறு விதமான ஹீரோயிசத்தை கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஜீவன்,படத்தொகுப்பாளர் பாபு,இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் கடினமாக உழைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையினால் தான் நான் பல சீன்களை மீண்டும் எழுதியிருக்கிறேன். 50 நாட்கள் வரை ரெக்கார்டிங்,ரீ ரெக்கார்டிங்கிற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 18 நாட்கள் இளையராஜாவோடு பணிபுரிந்த பிரபாகரனுடன் லைவ் ஸ்கோர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் அவ்வளவு இன்புட்ஸ் இருக்கிறது.
Director Prabhu solomons speech about #Sembi and it's making. pic.twitter.com/XRmzMYFvSK
— Prashanth Rangaswamy (@itisprashanth) December 29, 2022
80 ,90 களில் அந்த உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் கொடுத்த தாக்கத்தை கொடுப்பதற்கு ஒரு முயற்சி எடுத்துள்ளோம்.இதுவரை எடுத்த முயற்சிகளை கைதட்டி உள்ளீர்கள்.இதற்கும் கைதட்டல்கள் கொடுப்பீர்கள் என நினைத்து தான் இங்கு பிரிமியர் செய்கிறோம்." என பேசினார்.