20 Years Of Kadhal Konden: காதல் கொண்டேன் ரிலீஸாகி 20 வருஷம் ஆகிடுச்சா? தனுஷ் என்ன சொன்னாரு?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதல் கொண்டேன்’. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சைக்கோ என்று பட்டம் சூட்டப்படும் தனிமையானவர்கள்
தன் சிறு வயதில் இருந்து உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த வினோத் (தனுஷ்) தனது படிப்பிற்காக சென்னைக்கு விருப்பமில்லாமல் வந்து சேர்கிறார். ஆசிரமத்தில் அப்பாவியாக வெளியுலகம் தெரியாமல் வளர்ந்த வினோத்துக்கு சென்னை நகரின் கலாச்சாரம், பழக்க வழக்கம் என எதிலும் பொருந்த முடியவில்லை.
கல்லூரி நேரம் போக எஞ்சிய நேரங்களில் வெய்ட்டராக வேலை செய்வது, இடிந்த ஒரு வீட்டில் இருப்பது, வகுப்பறையில் தனது சக மாணவர்களின் கேலிக்குள்ளாவது என அனைத்தையும் சகித்துக்கொண்டு தனது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள போராடுகிறான் வினோத்.
காதல் கொண்டேன்
இந்தச் சூழலில், தனது வகுப்பில் தனியாக இருக்கும் வினோத்தின் வாழ்க்கையில் ஒளிபோல் வருகிறார் திவ்யா (சோனியா அகர்வால்). தன் அருகில் உட்காரவோ பேசவோ தயக்கப்படும் மற்றவர்களைப் போல் இல்லாமல் முதன்முறையாக அவனிடம் அன்பாக நடந்துக்கொண்டு, அவனையும் உணர்வுள்ள ஒரு மனிதனாகக் கருதும் ஒரு பெண்ணாக வந்து சேர்கிறாள் திவ்யா.
அவனிடம் இருக்கும் திறமைகளை அங்கீகரித்து அவற்றை வெளிப்படுத்த அவனை ஊக்குவிக்கிறாள். தனது ஆசிரமத்தில் இருந்த பாதிரியாரைத் தவிர தனது வாழ்க்கையில் அன்பு செலுத்திய ஒரு மனிதரைக்கூட பெற்றிருக்காத வினோத், திவ்யா மீது காதல் கொள்கிறான்.
அவனுக்கு அவள் எல்லாமுமாக இருக்கிறாள். தனக்கென இந்த உலகத்தில் ஒருவர் இருக்கிறார் என்று அவனுக்கு நம்பிக்கை வரும்போதுதான் தெரிகிறது, திவ்யா, ஆதி என்பவரைக் காதலிக்கிறார் என்று. இப்போது வினோத் என்ன செய்யப்போகிறான்? தனது காதலை எந்தச் சூழலிலாவது அவன் அடைவானா? இல்லை மறுபடியும் தனது பாழடைந்த வாழ்க்கைக்கு அவன் திரும்பப் போகிறானா? என்பதை நோக்கி கதைக்களம் பயணிக்கும்.
அவனது காதல் கடைசிவரை ஏற்கப்படப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து வைக்கப்பட்ட அன்பு அவனுக்கு நிறைவளிக்காது என்று உணர்ந்து தனது விதியை, தானே தேர்வு செய்துகொள்கிறான் வினோத்.
வாயடைக்க வைத்த தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த தனுஷ் தனது தோற்றத்துக்காக அனைவராலும் விமர்சிக்கப்பட்டார். தனது அண்ணன் செல்வராகவனுடன் இரண்டாவது படமாக காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்தார் தனுஷ். தனது மேல் வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கு பதில் சொல்லும்படியாக இந்தப் படத்தில் அவரது நடிப்பால் அனைவரையும் மிரளவைத்தார் தனுஷ்.
கதாநாயகன் பிம்பம்
வழக்கமான தமிழ் சினிமாவின் தெளிவான பலசாலியான ஒரு கதாநாயகனைப் போல் இல்லாமல் பலவீனமான சுமாரான தோற்றமுடைய கதாநாயகர்களையே செல்வராகவன் தனது படங்களில் உருவாக்குகிறார். மனம் பிறழ்ந்த ஒருவன் ஒரு படத்தில் கதாநாயகன் ஆக முடியுமானால் அது செல்வராகவனின் படத்தில்தான் இருக்க முடியும் .
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை செல்வராகவனின் படத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத வகையில் ஒவ்வொரு உணர்வுக்கும் பலம் சேர்த்திருந்தது.