"எளிதில் கடந்து போக முடியாது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' .. எங்கள் மக்களின் வலி.." விஜய் சேதுபதி படத்தை பார்த்து கண்கலங்கிய சீமான்..!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தைப் பார்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண் கலங்கிப் பேசியுள்ளார்.
புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. நடிகை மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், நடிகர் சின்னி ஜெயந்த், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா, நடிகைகள், கனிகா, ரித்திகா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்:
சந்திரா ஆர்ட்ஸ் பேனரின் கீழ இசக்கி துரை இப்படத்தைத் தயாரித்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ‘சேதுபதி’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மே 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், முன்னதாக இப்படத்தைப் பார்த்து ரசித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கண்கலங்கப் பேசியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளிர் ... கணியன் பூங்குன்றனார் பாடிய வரிகள் இது. அதை தம்பி இசக்கி துரை ஒரு படமாக உருவாக்கியுள்ளார். மிகுந்த பொறுப்புணர்வுடன் இப்படம் சொல்லப்பட்டுள்ளது. எங்கள் இனம் நீண்ட காலமாக தூக்கிச் சுமந்து வரும் வலி இதில் பதிவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் பங்கு அளப்பரியது. இயக்குநர் மக்களின் காயத்தை உணர்ந்து எடுத்துள்ளார். பல இடங்களில் நான் கண் கலங்கினேன்.
இதை எளிதாகக் கடந்துபோக முடியாது. சாதாரணமாக சில காட்சிகளைக் கடந்து போக முடியாது. குடியுரிமை இல்லாததால் ஒரு தலைமுறை தாண்டி இங்கு இருக்கிறோம். சட்டம் மீறி குடியேறியவர்கள் என்று கூறி அப்படியே விட்டுவிடுகிறார்கள். திபத்தியர்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளார்கள், நாங்கள் இன்னும் அகதிகளாக இருக்கிறோம். ஆனால் எல்லா விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினாலும் எங்களால் முன்னேற முடியாது.
உருக்கம்:
அயர்லாந்து போன்ற சம்மந்தமில்லாத நாடுகள் குடியுரிமை தருகிறார்கள். கனடா, ஃபிரான்ஸ் நாடுகளில் தமிழர்கள் உயர் பதவிகளில் இருக்கிறோம். ஆனால் இந்த நாடு இன்னும் அகதிகளாகவே பார்க்கிறது. இரட்டைக் குடியுரிமை கூட கேட்கிறோம், இதை தான் இந்தப் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
இறுதிக்காட்சியில் விஜய் சேதுபதி பேசுவது மிகவும் உருக்கமாக இருக்கிறது. உலகக் குடிமகனாக பேசுகிறேன், எனக்கு நாடு, உறவு இல்லை எனப் பேசுகிறார். அது உண்மை. ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யும்போது தீவிரவாதம் என்றீர்கள், எல்லாம் முடித்து விட்டு அரசியர் தீர்வு காண்போம் என்றீர்கள், ஆனால் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பு முகாம் என்பது சித்திரவதை முகாம்.
கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல் ஒருவர் தன் சொத்தைப் பிரிவது, சொந்தங்களைப் பிரிவது சோகம் அல்ல; தன் நாட்டைப் பிரிவது தான் சோகம். அதுபோல் பிறந்த நாட்டை விட்டு எங்கெங்கோ சென்று வாழும் என் இன மக்களின் வலியை இந்தப் படம் கூறுகிறது. இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள். இது படமல்ல, பன்னெடும் காலமாக பாதிக்கப்பட்ட எங்கள் மக்களின் வலி..” எனப் பேசியுள்ளார்.