24 Years Of Malabar Police: சேட்டனாக அசத்திய சத்யராஜ்... காமெடியில் கலக்கிய கவுண்டமணி.. ‘மலபார் போலீஸ்’ வந்து 24 வருசமாச்சு..!
24 Years Of Malabar Police: தொலைக்காட்சிகளில் இன்று ஒளிப்பரப்பானால் கூட ரசித்து பார்க்கக் கூடிய படம் மலபார் போலீஸ்.
சத்யராஜ் , குஷ்பு , கவுண்டமனி, அப்பாஸ், மும்தாஜ், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்து கடந்த 1999 ஆம் வருடம் வெளியான மலபார் போலீஸ் திரைப்படம் இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பி.வாசு இயக்கிய மலபார் போலீஸ் நகைச்சுவை ,சென்டிமெண்ட் கலந்த ஒர் க்ரைம் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டது.
மலபார் போலீஸ்
ராஜா (அப்பாஸ்) மற்றும் ஜூலி (மும்தாஜ்) ஆகிய இருவரும் காதலித்து ஓடிப்போகிறார்கள். அமைச்சரை கொலை செய்வதை இந்த காதல் ஜோடிகள் பார்த்துவிடுவதால் இவர்களை கொலை செய்ய முயற்சிக்கிறார் ஆனந்தராஜ் . அவரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் காதலர்கள் தனித்தனியாக பிரிந்து விடுகிறார்கள். இதனிடையே அமைச்சரின் கொலையை விசாரணை செய்ய கேரளாவில் இருந்து வருகிறார் சின்னசாமி (சத்யராஜ்) மற்றும் அவரது மனைவி அம்முகுட்டி (குஷ்பு) இவர்களுக்கு உதவியாக நியமிக்கப் படுகிறார் கோவிந்தராஜ் (கவுண்டமனி). இந்த கொலைக்குப் பின் இருக்கும் நபரை கண்டுபிடிக்க முயற்சிக்கும் சின்னசாமி எதிர்கொள்ளும் சவால்களே மலபார் போலீஸின் கதை.
மிகப்பெரிய வெற்றி
1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மலபார் போலீஸ் படம். படத்தின் வெற்றிக்கு வெவ்வேறு காரணங்களை சொல்லலாம்
சத்யராஜ் - கவுண்டமணி காம்பினேஷன்
பொதுவாகவே சத்யராஜ் மற்றும் கவுண்டமணிக்கு இடையிலான காம்பினேஷன் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மலபார் போலீஸ் படத்தில் அது இன்னும் சிறப்பாக அமைந்ததற்கு காரணம் சத்யராஜ் மலையாளம் பேசுவதும் கவுண்டமணி தமிழ் பேசுபவராக இருப்பதும் தான். மலையாளத்தில் இவர் பேசுவதை வைத்து கவுண்டமணி அடித்த எல்லா காமெடிகளும் வெடித்து சிரிக்க வைத்தன. ஒரு காட்சியில் பலாப்பழத்தை மலையாளத்தில் சக்கை என்று கேட்க கவுண்டமணி மாட்டிற்கு வைக்கும் வைக்கோலை கொண்டுவந்து வீசிவிட்டு “இந்தாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மேய்ங்க” என்று சொல்வது எல்லாம் அடாவடியின் உச்சம். ஒவ்வொரு முறையும் கோவிந்தோ கோவிந்தோ என்று சத்யராஜ் கூப்பிடும் போதெல்லாம் கவுண்டமணி கொடுக்கும் ரியாக்ஷன்கள் காரணம் இல்லாமல் நம்மை சிரிக்க வைப்பவை.
குஷ்பு சத்யராஜ்
சத்யராஜ் மட்டுமில்லாமல் குஷ்புவும் ஒரு மலையாளத்துப் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். இருவரும் சேர்ந்து கான்ஸ்டபிள் கோவிந்தராஜை ஒருபாடு படுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கும் மேலாக ஒருவரின் மீது ஒருவர் அக்கறைக் கொண்ட பலவீனமான ஒரு தம்பதிகளாக இவர்களின் கதாபாத்திரங்கள் அமைந்திருப்பது பார்வையாளர்களை அவர்களோடு ஒன்றவைத்தது. தங்களுக்கு குழந்தை பிறக்காத குறையை நினைத்து கஷ்டப்படும் இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தைப் போல் நடத்திக்கொள்ளும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக மக்களை சென்றடைந்தன.
விறுவிறுப்பான கதை
ஒரு பக்கம் காமெடி , ஒரு பக்கம் ரொமான்ஸ் என்று போகும் படம் அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு படமாகவும் இருந்தது தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். படத்தில் கடைசிவரை சிவகுமார் வில்லன் என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் படத்தில் இடம்பெறுகிறது. வழக்கமாக சத்யராஜ் உணர்ச்சிகரமான ஒரு நடிகர்தான் என்றாலும் இந்தப் படத்தில் நமது சொந்த ஊர்க்காரராக இல்லாமல் வேறு மொழி பேசும் ஒருவராக இன்னும் உணர்ச்சிகரமாகவே நடித்திருந்தார். அது மக்களுக்கு புதிதாகவும் இருந்தது. தொலைக்காட்சிகளில் இன்று ஒளிப்பரப்பானாலும் மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு படமாக மலபார் போலீஸ் இருப்பதே அதன் 24 ஆண்டுகளின் வெற்றி .