Nandhan : நந்தன் படத்தில் ஸ்டாலின் படம் வைத்தது ஏன்? போல்டாக உடைத்து பேசிய இயக்குநர் சரவணன்
நந்தன் திரைப்படத்தில் நடப்பது போல் சாதிய ஒடுக்குமுறைகள் எல்லா ஆட்சியிலும் நடந்து வருவதாக படத்தின் இயக்குநர் இரா சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்
நந்தன்
கத்துகுட்டி , உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனமீர்த்தவர் இயக்குநர் இரா சரவணன். தற்போது சசிகுமார் நடித்து அவர் இயக்கியுள்ள படம் நந்தன் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சசிகுமார் , ஸ்ருதி பெரியசாமி , எஸ் மாதேஷ் , மிதுன் போஸ் , பாலாஜி சக்திவேல் , சமுத்திரகனி , ஜி.எம் குமார் , சித்தன் மோகன் , சக்தி சரவணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள் . ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக சசிகுமார் நடித்த அயோத்தி படத்தைப் போல் இப்படமும் பெரியளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதிய அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக நடக்கும் நிகழ்வை இப்படம் பரவலான கவனத்திற்கு கொண்டு வரும் என்றும் இதன் மூலம் இந்த பிரச்சனையை மக்கள் பேசத் துவங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்துள்ளார் இரா சரவணன்.
எல்லா ஆட்சியிலும் இது நடக்கிறது
நந்தன் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் மிக துணிச்சலாக இந்த கதையை படமாக்கியுள்ளார் என பலர் தெரிவித்துள்ளார்கள். நந்தன் படத்தின் சிறப்பு திரையிடல் முடிந்த பின் படத்தின் இயக்குநர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இப்படத்தில் நடப்பது போல் இன்றைய சூழலிலும் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர் இரா சரவணன் இப்படி கூறியுள்ளார் “ இந்த படத்தில் பின்னணியில் ஸ்டாலின் புகைப்படத்தை காட்டியது தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் தாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை. இன்று வரை இப்படியான ஒரு ஒடுக்குமுறை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த படத்தின் கதை 2024 ஆம் ஆண்டு நடக்கிறது என்பதை தான் படத்தில் காட்டி இருக்கிறேன். இன்றைய சூழலில் நடக்கும்போது யார் முதல்வராக இருக்கிறாரோ அவரது புகைப்படத்தை தான் வைக்க முடியும். ஆனால் யார் ஆட்சி வந்தாலும் இந்த நிலை அப்படியே தொடர்கிறது என்பது தான் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது. அந்த ஆதங்கத்தில் தான் இந்த படத்தையே எடுக்க முடிவு செய்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Bold statement from @erasaravanan pic.twitter.com/svn8biSWCC https://t.co/XCvnmWrkY9
— Rajasekar (@sekartweets) September 19, 2024