Dancing rose in Beast | விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இணையும் சார்பட்டா டான்சிங் ரோஸ்...! செம அப்டேட்..!
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில், வில்லனாக டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் இணைந்துள்ளார்.
![Dancing rose in Beast | விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இணையும் சார்பட்டா டான்சிங் ரோஸ்...! செம அப்டேட்..! sarpatta fame dancing rose shabir kallarkal joins actor vijay beast movie Dancing rose in Beast | விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இணையும் சார்பட்டா டான்சிங் ரோஸ்...! செம அப்டேட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/09/a6d017d653a5735b962c0a0b6bad63f3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே டாக்டர் படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் பீஸ்டில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மூன்று வில்லன் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். மலையாள நடிகரான ஷைன்டாம் சாக்கோ ஏற்கனவே வில்லனாக நடிக்கிறார் என்பது அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த படத்தில் செல்வராகவன் இணைந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு, படக்குழுவினர் தற்போது இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளனர். சார்பட்டா படத்தின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லக்கல் தற்போது மூன்றாவது வில்லனாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைகிறார். ஏற்கனவே, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ள பீஸ்ட் படக்குழுவில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷபீர் கல்லரகல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பல்வேறு படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில், இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த சார்பட்டா படத்தில் டான்சிங் ரோஸ் என்ற வித்தியாசமான குத்துச்சண்டை வீரரராக ஷபீர் நடித்திருந்தார். படத்தின் நாயகன் கபிலன் கதாபாத்திரத்தை காட்டிலும், எதிர்நாயகன் வேம்புலி கதாபாத்திரத்தை காட்டிலும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது டான்சிங் ரோஸ் கதாபாத்திரம். முகநூல், இன்ஸ்டாகிராம் என்று அனைத்து சமூக வலைதளங்களிலும் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படமான பீஸ்ட்டில் ஷபீர், இணைந்திருப்பதற்கு அவரது ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணாதாஸ், ரெடின் கிங்ஸ்லி, லில்லிபுட், அங்கூர்விகலும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பை நிர்மல் மேற்கொள்ள உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், தற்போது வெளிநாட்டில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் நாட்டில்தான் நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)