Tamil Cinema : 2001 - 2008 தமிழ் சினிமாவின் பொற்காலம்...தகவல்களை அடுக்கிய பி.எஸ் மித்ரன்
2001 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகள் என்பது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இயக்குநர் பி.எஸ் மித்ரன் தெரிவித்துள்ளார்.
தத்தளிக்கும் கோலிவுட் சினிமா
2024 ஆம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சுமாரான ஆண்டு என்றே சொல்லலாம். தெலுங்கு மலையாள மொழியில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறும் நிலையில். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய படங்கள் தோல்வியைத் தழுவின. ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அயலான் , கேப்டன் மில்லர் , லால் சலாம் ஆகிய படங்கள் ஓரளவிற்கு சுமாரான வசூலையே எடுக்க முடிந்தது. அதே நேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 வசூல் ரீதியாக பெரியளவில் தோல்வியை தழுவியது.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை இந்த ஆண்டு 100 கோடி வசூலித்த முதல் தமிழ் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் மகாராஜா , தனுஷின் ராயன் , சமீபத்தில் வெளியாகிய தங்கலான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. இருந்தும் கடந்த ஆண்டு ஜெயிலர் படத்திற்கு இணையான வெற்றிப்படம் இதுவரை அமையவில்லை. இனி வரக்கூடிய மாதங்களில் விஜயின் தி கோட் , சூர்யாவின் கங்குவா , ரஜினியின் வேட்டையன் , அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இன்று வெற்றிப்படங்களுக்காக தத்தளிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் வெளியான காலம் ஒன்று இருந்தது. இது குறித்து சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ் மித்ரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் பொற்காலம்
இந்த வீடியோவில் பி.எஸ் மித்ரன் 2001 முதல் 2008 வரையிலான 7 ஆண்டுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று குறிப்பிடுகிறார் “ தில் , தூல் , கில்லி , சாமி , விருமாண்டி , ஹே ராம் , பருத்திவீரன் , நந்தா , சேது , பிதாமகன் , புதுப்பேட்டை , 7 ஜி ரெயின்போ காலணி , காதல் கொண்டேன் , அஞ்சாதே , சித்திரம் பேசுதடி , காக்க காக்க , மின்னலே வேட்டையாடு விளையாடு என எங்கு திரும்பினாலும் நல்ல படங்கள் இருக்கும். இன்று மொக்க படம் என்று சொல்கிறார்கள் இல்லையா அந்த மாதிரி படங்களே பார்த்தது கிடையாது . இந்த படங்கள் எல்லாம் ஒன்றில் இருந்து இன்னொன்று வேறுபட்டவை . மிஸ்கின் , செல்வராகவன் , விஷ்னுவர்தன் என ஓவ்வொரு இயக்குநரும் அவரது உச்சத்தில் இருந்தார்கள். “ என்று பி.எஸ் மித்ரன் தெரிவித்துள்ளார்.
தி கோட்
விஜயின் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிரசாந்த் , பிரபுதேவா , சினேகா , லைலா , மீனாக்ஷி செளதரி , மோகன் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் திரைப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய பான் இந்திய வெற்றிபெறும் என்று ரசிகர்களால் எதிரபார்க்கப்படுகிறது. தெலுங்கில் பிரபாஸின் கல்கி படத்தைப் போல் தி கோட் படம் 1000 கோடி வசூலீட்டும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.