3 BHK Trailer: வீடு அப்டிங்குறது மரியாதை.. மனதை ரணமாக்கும் 3BHK ட்ரெயிலர் - குவியும் பாராட்டு
சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள 3 பிஎச்கே படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சரத்குமார். பிரபலமான கதாநாயகர்களில் ஒருவராக உலா வருபவர் சித்தார்த். இவர்கள் இணைந்து நடித்துள்ள படம் 3 பி.எச்.கே. இந்த படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.
3 பிஎச்கே ட்ரெயிலர்:
எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தினருக்கு சொந்த வீடு எவ்வளவு அவசியம் என்பதையும், அதற்காக அவர்கள் படும் இன்னல்களே படம் ஆகும். படத்தின் ட்ரெயிலரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக சரத்குமாரும், குடும்பத் தலைவியாக தேவயானியும், குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்கும் மகனாக சித்தார்த்தும், குடும்ப பொறுப்புகளை உணர்ந்து நடக்கும் மகளாக மீதா ரகுநாத்தும் நடித்துள்ளனர்.
எப்படி இருக்கிறது?
சரத்குமார் வீட்டிற்காக படும் இன்னல்களும், சித்தார்த் தனது தந்தையின், தங்களது குடும்பத்தின் கனவை நிறைவேற்ற படும் அவஸ்தைகளையும் மிக மிக யதார்த்தமாக படமாக எடுத்துள்ளனர் என்பதையே படத்தின் ட்ரெயிலர் உணர்த்துகிறது. வீடு என்பது மரியாதை என்று சரத்குமார் கூறும் அந்த வசனம் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஒவ்வொருவரின் கனவையும் பிரதிபலிக்கும் வார்த்தை ஆகும்.
குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என்று குடும்ப பாங்கான படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த வரிசையில் 3 பி.எச்.கே படமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
8 தோட்டாக்கள் இயக்குனர்:
8 தோட்டாக்கள் என்ற படம் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீகணேஷின் அடுத்த படம் குருதி ஆட்டம் பெரியளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கியுள்ள படம் இந்தாண்டு வெளியாகிறது. இந்த படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு மற்றும் சைத்ரா அகரும் நடித்துள்ளனர். சூர்யவம்சம் எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பட ஜோடியான சரத்குமார் - தேவயானி ஜோடி பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஜுலை 4ம் தேதி ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய வெற்றியை சித்தார்த், சித்தா படத்திற்கு பிறகு அளிக்கவில்லை. இந்தியன் 2 படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த படத்தில் அவருக்கு பாராட்டுகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.





















