Samantha : 6 மணிக்கு மேல ஸ்டார் எல்லாம் கிடையாது.. நாய்க்குட்டிகளை சுத்தம் பண்ணனும்.. ஜாலி மோடில் சமந்தா
பான் இந்தியன் ஸ்டாராக இருந்தும், நான்தான் அவர்களை இன்றளவும் சுத்தம் செய்து வருகிறேன். என் வாழ்க்கை மாறவில்லை என்று நான் நினைக்கிறேன் - என சாகுந்தலம் படம் ப்ரோமோஷனில் சமந்தா பேசியுள்ளார்
யசோதா படத்திற்கு பின், சமந்தா நடிப்பில் சாகுந்தலம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் எனும் புராண கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட குணசேகரனின் படத்தில் சமந்தா சாகுந்தலாவாகவும், தேவ் மோகன் துஷ்யந்தாவாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் மும்பை மற்றுக் ஹைதராபாத் ஆகிய மாபெரும் நகரங்களில் சாகுந்தலம் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட சமந்தா, "நான் 'தி ஃபேமிலி மேன் 2' போன்ற வன்முறை நிறைந்த கதைகளில் நடித்து வந்தேன். என் சிறுவயதில் நான் எப்போதும் டிஸ்னி படங்களை விரும்பி பார்ப்பேன். நான் சந்தோஷமாக இருக்கும் போதும் சரி, சோகமாக இருக்கும்போதும் சரி நான் டிஸ்னி படங்களை பார்ப்பேன்.
சாகுந்தலம் படத்தில் இளவரசியாக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் என் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. முதலில் இக்கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால், நான் கடந்த சில வருடங்களாக பல சவால்களை சந்தித்து வருகிறேன். அதனால் இக்கதாபாத்திரத்தையும் நான் சவாலாக எடுத்து நடித்துள்ளேன். தயாரிப்பாளர் தில் ராஜு, இந்த கதையின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்தார். சிறுவயதில் நான் கண்ட கனவு இப்படம் மூலம் பலித்துவிட்டது. இப்படத்தில் நான் நடிக்கும் போது எப்படி உணர்ந்தேனோ அப்படியே, மக்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது சாதாரண கதையல்ல. இதில், காதல், துரோகம் என அனைத்தும் நிறைந்துள்ளது. நான் நடித்த சகுந்தலா கதாபாத்திரம், பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சிக்கல் நிறைந்த கதாபாத்திரம் ஆகும்” என்றார்
பத்திரிக்கையாளர்களுடன் உரையாடிய சமந்தா, அல்லு அர்ஜுன் மகளாகிய அர்ஹா பற்றியும் பேசியிருந்தார். சாகுந்தலம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஆர்ஹாவின் சினிமா வாழ்க்கையில், அல்லு அர்ஜூன் தலையிட மாட்டார் என்று நினைக்கிறேன். குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் சாகுந்தலம் படம் பிடித்துவிடும். அர்ஹா நடித்துள்ள கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களை போல சிறப்பாக வந்துள்ளது.
பான்-இந்திய நட்சத்திரமான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு, சமந்தா சிரித்துக்கொண்டே பதிலைக் கொடுத்தார். “யாரேனும் எனது செல்லப்பிராணிகளிடம் நான் ஒரு பான்-இந்திய நட்சத்திரம் என்று சொல்லுங்கள். ஏனென்றால், பான் இந்தியன் ஸ்டாராக இருந்தும், நான்தான் அவர்களை இன்றளவும் சுத்தம் செய்து வருகிறேன். என் வாழ்க்கை மாறவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு நட்சத்திரம்தான். ஆனால், 6 மணிக்கு மேல் என்னுடைய வாழ்க்கையும் மற்றவர்களை போலவே சாதாரணமாகத்தான் இருக்கும்.” என்று பேசினார்.
“நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் நான் பெருமையாக உணர்கிறேன். என் வேலை கடினமானதாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எப்போதும் ஹீரோக்களால் காப்பாற்றப்படும் ஹீரோயினாக இருப்பதைத்தாண்டி, சண்டைக்காட்சிகளில் நடிக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன். வாழ்க்கையின் புதியதொரு கட்டத்தில் உள்ளேன். இக்கட்டத்தில் இருக்கும் நான் மனமார்ந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன்.” என சமந்தா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.