Samantha Ruth Prabhu: முயல் கடிச்சிடுச்சி! - சம்பவம் செய்த சாகுந்தலம் படப்பிடிப்பு: 5 சோக ரகசியங்களை பகிர்ந்த சமந்தா!
சாகுந்தலம் படம் குறித்து யாருக்கும் தெரியாத ஐந்து ரகசியங்கள் எனக் குறிப்பிட்டு சமந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சாகுந்தலம் ஷூட்டிங்கின்போது தன்னை முயல் கடித்தது உள்பட பல ரகசியங்களை நடிகை சமந்தா பரிந்துள்ளார்.
நாளை வெளியாகும் சாகுந்தலம்
யசோதா திரைப்படத்தை அடுத்து நடிகை சமந்தா நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘சாகுந்தலம்’.
நாளை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தா சகுந்தலாவாகவும் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர். காளிதாஸ் இயற்றிய ’சாகுந்தலம்’ எனும் புராணக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, குணசேகர் இயக்கியுள்ளார். மணி சர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஷூட்டிங்கில் முயல் கடி...
நாளை 3டி தொழில்நுட்பத்தில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் படப்பிடிப்பின் போது தன்னை முயல் கடித்ததாக சமந்தா நினைவுகூர்ந்து வீடியோ பகிர்ந்துள்ளார்.
சாகுந்தலம் படம் குறித்து யாருக்கும் தெரியாத ஐந்து ரகசியங்கள் எனக் கூறி வீடியோ பகிர்ந்துள்ள சமந்தா, “எனக்கு பூக்கள் அலெர்ஜி ஏற்பட்டது. நாள் முழுக்க பூக்களை என் கைகளிலும் கழுத்திலும் சூடிக்கொண்டு நடித்த நிலையில், பூக்களின் முத்திரை பதிந்து டாட்டூ போல் அது ஒட்டிக் கொண்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தான் அது சரியானது.
இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நான் டப் செய்தேன். சக நடிகர்கள் எப்படி இதை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை, தூக்கத்தில் கூட நான் வசனங்களை டப்பிங் நாள்களில் பேசத் தொடங்கினேன்” என வியப்புடன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சமந்தா, “சாகுந்தலம் படப்பிடிப்பின்போது முயல் ஒன்று என்னைக் கடித்துவிட்டது. முயல்கள் வெறும் க்யூட்டான விலங்குகள் மட்டுமல்ல” எனவும் கவலையுடன் பகிர்ந்துள்ளார்.
‘30 கிலோ லெஹங்கா அணிந்தேன்’
மேலும் 30 கிலோ எடையுள்ள லெஹங்காக்கள் வரை அணிந்து தான் சாகுந்தலம் படத்தில் நடித்ததாகவும், அந்த லெஹங்காவை அணிந்து கொண்டு 10 முதல் 15 டேக்குகள் வரை வாங்கி நான் பல இடங்களில் நடித்ததாகவும், இறுதியாக சாகுந்தலம் படத்தில் இருப்பது தன் உண்மையான முடி அல்ல என்றும் சமந்தா பேசியுள்ளார்.
View this post on Instagram
சமந்தாவின் இந்த வீடியோ இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை அள்ளி ஹிட் அடித்துள்ளது.
சாகுந்தலம் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள ‘குஷி’ வருண் தவான் உடன் ‘சிட்டெடல்’ வெப் சீரிஸ் ஆகியவை சமந்தா நடிப்பில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களை முடித்த பிறகு, தான் சில நாட்கள் ஓய்வில் இருக்கப்போவதாகவும் அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.