Actor Samantha: கையில் ட்ரிப்ஸ்... மருத்துவமனையில் அனுமதி... சமந்தாவுக்கு என்ன ஆச்சு?
Samantha Diagnosed with Myositis: தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவதாக கூறி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.
தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. ஹரிஹரிஷ் இயக்கியுள்ள யசோதா படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாக வதந்தி பரவி வந்தது.
View this post on Instagram
கடந்த 2 தினங்களுக்கு முன்பு யசோதா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், யசோதா படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பெற்று சரியான பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நீண்ட காலம் எடுக்கும். நாம் எப்பொழுதும் நம்முடைய பலத்தை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன்.
நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தது. என்னால் இன்னும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்று உணரும் நேரத்தில் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும் என்று தெரிவித்துள்ளார்.





















