Salman Khan: ‛கணபதி பப்பா மோரியா.’ விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடிய சல்மான்கான்!
பாலிவுட் நடிகர் சல்மான்கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்!
பாலிவுட் நடிகர் சல்மான்கான்!
பாலிவுட் திரையுலகில் 30 வருடங்களுக்கும் மேலாக மார்கெட்டில் இருப்பவர் சல்மான்கான். தனது நடிப்பால், பல தேசிய விருதுகளையும், ஃபில்ம் ஃபேர் விருதுகளையும் வாங்கி குவித்து விட்டார். அதைவிட பெரிதாக, மிகப்பெரிய தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து விட்டார். இவர் நடிப்பில் வெளியான சுல்தான், டைகர் ஜிந்தா ஹை, தபாங் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவரது சமீபத்திய படமான ஆன்டிம் தி பைனல் ட்ரூத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனது நடிப்பினால் நற்கருத்துக்களை கூறுபவர் சல்மான்கான். இயல்பாகவே சல்மான்கான் எம்மதமும் சம்மதம் என்ற இயல்பை உடையவர், இதற்கு சான்றாக இவர் நடிப்பில் வெளியான சில படங்களை கூறலாம்.
எம்மதமும் சம்மதம்:
கடந்த 2015-ஆம் ஆண்டு சல்மான் ஹீரோவாக நடிக்க பஜ்ரங்கி பாய்ஜான் படம் வெளியானது. இதில் அனுமான் பக்தராக சல்மான் நடித்திருந்தார். அது மட்டுமன்றி, அனுமானுக்கே உரிய வஜ்ராயுத டாலரை அணிந்தவாறு படம் முழுவதம் வந்தார். பிறப்பில் இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் அனுமன் பக்தராக நடித்ததற்கு பாராட்டுகள் எழுந்தாலும், இந்த விஷயம் சில நபர்களிடையே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் சல்மான் இதையெல்லாம் கண்டுகொண்டதே இல்லை. இதனால், இந்தியர்களுக்கே உரிய ‘எம்மதமும்-சம்மதம்’ பாலிஸியை சல்மான்கான் தீவிரமாக கடைப்பிடிப்பதாக பரவலாக பேசப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என அனைத்து திரையுலக செலிப்ரிட்டிகளும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் சல்மான் கானும் விநாயகர சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ளார்.இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “கணபதி பப்பா மோரியா” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
எப்போதும், 'ரக்கட்-பாய்யாக' தோற்றமளிக்கும் சல்மான்கான், இந்த வீடியோவில், வெள்ளை உடையில் சாந்தமாக காட்சியளிக்கிறார். தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ள அவர், பேக்-ரவுண்டில் ஒலிக்கும் விநாயகர் பாடலுக்கு ஏற்றார்போல் கைத்தட்டி தனது உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில் சல்மானின் சாந்த முகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள சல்மான்கான் ரசிகர்கள் வீடியோவை ரீ-ஷேர் செய்து வருகின்றனர். இதனால் வீடியோ வைரலாகி வருகின்றது.
ஒரு கூட்டம் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும், மற்றொரு கூட்டம், “தலைவா, இந்த வருடமாவது கல்யாணம் குறித்த அப்டேட் விடுவியா?” என ஏக்கமாக கேள்வியெழுப்பி வருகின்றனர்!