படம் கூரையை பிச்சுட்டு போகும்...சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சாய் அப்யங்கர் கூறியுள்ளார்

கருப்பு டீசர்
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள படம் கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தெரிவித்துள்ளார்.
" சூர்யாவிடம் ரசிகர்கள் பார்த்து ரசித்த அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும். சிங்கம் படத்திற்கு பின் கூரை பிச்சுகிட்டு போகும் படம் இது. ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருவிழாதான்" என சாய் அப்யங்கர் கருப்பு படத்தைப் பற்றி செம அப்டேட் கொடுத்துள்ளார்
அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துவந்த சூர்யா நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரு படங்கள் சூர்யா கரியரில் மைல் கல்லாக அமைந்தது. ஆனால் இந்த படங்களுக்குப் பின் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான கங்குவா திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது. இந்த ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. ஆனால் அயன் , சிங்கம் , ஆதவன் என ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த பெரும் வெற்றிப்படங்கள் மாதிரி அவருக்கு இன்னொரு படம் இதுவரை அமையவில்லை. அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு மீண்டும் ஒரு பக்கா கமர்சியல் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
சூர்யா 46
சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த மே 19 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















