SA Chandrasekhar: ”சினிமா வேறு வாழ்க்கை வேறு” அடித்துச் சொன்ன இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்!
நாட்டில் நடக்கும் தவறுகளை நாம் தைரியமாக சொல்லக்கூடிய ஒரே மீடியா சினிமாதான். எழுத்தாளரால்தான் நாட்டில் எழுச்சியை உண்டாக்க முடியும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

நாட்டில் நடக்கும் தவறுகளை நாம் தைரியமாக சொல்லக்கூடிய ஒரே மீடியா சினிமாதான். எழுத்தாளரால்தான் நாட்டில் எழுச்சியை உண்டாக்க முடியும் என்று ’ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
ராம் அப்துல்லா ஆண்டனி:
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரிடமும் பிரபலமானவர் பூவையார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திலும் ஒரு பாடலில் அறிமுகமானார்.பின்னர், மாஸ்டர், மகாராஜா, அந்தகன் போன்ற படங்களிலும் நடித்தார். இச்சூழலில் தான் இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் மூலம நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 09) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார்.
எழுத்தாளரால் தான் எழுச்சியை உண்டாக்க முடியும்:
”ஒரு எழுத்தாளரால் தான் நாட்டில் ஒரு எழுச்சியை உருவாக்க முடியும். 80 காலக்கட்டங்களில் நாங்கள் பொழுது போக்கு திரைப்படங்கள் தான் எடுப்போம். தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்தோம். ஆனால், அதற்குள் ஏதாவது விசயங்களை சொல்லிக்கொண்டே போவோம். ஒவ்வொரு படத்தையும் போராடிதான் ரிலீஸ் செய்வோம். என்னுடைய படங்கள் எல்லாம் போராடி வெளியிடும் படிதான் இருக்கும். நாட்டில் நடக்கும் தவறுகளை நாம் தைரியமாக சொல்லக்கூடிய ஒரே மீடியா சினிமாதான்.
இப்போதெல்லாம் யாரும் பத்திரிகைகளை படிப்பதில்லை. உங்களை போன்ற இளைஞர்கள் சமூகத்தை நல்வழிபடுத்த வேண்டும். சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று யாரும் நினைப்பதில்லை. சினிமா தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். சினிமாவில் என்ன நடக்கிறதோ அதை நாமும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட கையில் கத்தியுடன் இருக்கிறார்கள். அதை நாம் ஆதரித்துவிடக்கூடாது. ஒரு எழுத்தாளராக ஒரு இயக்குனராக நான் அதை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வருங்கால சமூகம் நன்றாக இருக்க வேண்டும்”என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.





















