S.J. Suryah: 5 ஆண்டுகால போராட்டம்... குழந்தையைப் போல அழுது புரண்ட எஸ்.ஜே.சூர்யா..என்ன காரணம்?
அமிதாப் பச்சன் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ருசிப்பதற்கு முன்னரே அது கை நழுவிவிட்டது. அந்த சமயத்தில் சிறு குழந்தையை போல தரையில் உருண்டு அழுதேன்.
தமிழ் சினிமா இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவராக பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. விரும்பப்பட்ட ஒரு இயக்குநராக இருந்தவர் திடீரென சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு பின்னர் நடிகராக என்ட்ரி கொடுத்தார். தற்போது ஒரு நடிகராக பல விதமான கதாபாத்திரங்களில் நிரூபித்து வருகிறார்.
அமிதாப் தமிழ் சினிமாவில் அறிமுகம் :
அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நடிகர் அமிதாப் பச்சனுடன் 'தேரா யார் ஹூன் மைன்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தமிழ்வண்ணன் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழி படமாக 2018ம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. தமிழில் 'உயர்ந்த மனிதன்' என்ற பெயரில் உருவான இப்படத்தின் மூலம் நடிகர் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது குறித்த தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
தாங்க முடியாத துக்கம் :
அமிதாப் பச்சன் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ருசிப்பதற்கு முன்னரே அது கை நழுவிவிட்டது. அப்படத்தை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளை முடிந்த வரையில் எடுத்தும் பலனில்லாமல் போனது. அதற்காக நான் ஐந்து ஆண்டுகளாக கடுமையாக போராடினேன். அந்த சமயத்தில் சிறு குழந்தையை போல நான் தரையில் உருண்டு உருண்டு அழுதேன். என்னால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.
கடவுள் கொடுத்த வலி :
ஏன் கடவுள் நமக்கு இவ்வளவு வலி கொடுக்கிறான், வேலையை தானே செய்தோம் என சொல்லி உடைந்து போனதாக தெரிவித்து இருந்தார். மேலும் கடவுள் ஒரு கதவை மூடினாலும் மற்றுமொரு கதவை திறந்து பல நல்ல நல்ல படங்களை தந்தார். கடவுள் என்னை இயக்குநராக உயர்ந்த நிலையில் கொண்டு சென்றார் ஆனால் ஒரு நடிகராக நான் சினிமா துறையில் உச்சத்தை தொட ஆசைப்பட்டேன். அதற்கு நான் கடுமையாக உழைத்து கீழே விழுந்து அடிபட்டேன். ரத்தம் கசிந்த பிறகு அதற்கு கட்டு போட்டு கொண்டு மீண்டும் ஓட துவங்கிவிட்டேன்.
கோமாளி போல நடந்து கொள்கிறார் :
நியூ மற்றும் அன்பே ஆருயிரே திரைப்படங்கள் எஸ்.ஜே. சூர்யாவை ஒரு நடிகராக நிலைநிறுத்தியது. அவரே அதை இயக்கியிருந்தார். ரசிகர்களும் அப்படங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். ஆனால் திரையுலகில் இருக்கும் பெரிய ஜாம்பவான்கள் 'அவர் ஏன் நடிக்கிறார்? கோமாளி போல் கேலிக்கூத்தாக நடந்து கொள்கிறார்.' என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
நன்றாக நடிக்க பயிற்சி :
மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கையில் நான் ஒரு பயிற்சி பெற்ற நடிகர் அல்ல என்பதை உணர்ந்தேன். ஒரு பயிற்சியாளராக இருப்பதற்கும், ஒரு விளையாட்டு வீரராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை அப்போது நான் தெளிவாக புரிந்து கொண்டேன். எனவே ஒரு நடிகருக்கு தேவையான அனைத்து அம்சங்களை பயிற்சி எடுத்து கொண்டு 'இசை' மற்றும் 'இறைவி' படத்தின் நடித்தேன். அதனை தொடர்ந்து என்னுடைய நடிப்பை அங்கீகரித்த பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர துவங்கியதால் தொடர்ந்து நடித்து வருகிறேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.