Lust Stories 2: புதிரானது காமம்.. கொங்கனா சென் ஷர்மா இயக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 விமர்சனம்
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் . தற்போது இந்த ஆந்தாலஜியின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் . சமூகத்தில் பாலியல் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது லஸ்ட் ஸ்டோரீஸ். தற்போது இந்த ஆந்தாலஜியின் இரண்டாம் பாகம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர், விஜய் வர்மா, திலோதமா ஷோமே ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மொத்தம் நான்கு கதைகள் இடம்பெற்றுள்ள இந்த ஆந்தாலஜியில் இரண்டாவது கதையை இயக்கியிருக்கிறார் கொங்கனா சென் ஷர்மா. சற்று அறிமுகம் இல்லாத பெயர்தான். டெத்-இன்-த-கஞ்ச் என்கிற மிக அருமையான ஒரு படத்தை முடிந்தால் பார்க்கத் தவறாதீர்கள்.
இரண்டாவது கதை
தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வாழும் பெண் ஒருவர். அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைபடுபவர். ஒரு நாள் தலைவலி காரணத்தினால் வழக்கமான நேரத்தில் இல்லாமல் சற்று முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்குத் திரும்புகிறார். தன்னிடம் உள்ள சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே சென்றால் தனது வீட்டு வேலைக்கு வரும் பெண் யாரோ ஒரு ஆணுடன் தனது படுக்கையில் உடலுறவு கொள்வதைப் பார்க்கிறார். பார்த்து அடுத்து என்ன செய்கிறார்? எதுவும் செய்யவில்லை. அடுத்த நாளும் அதே மாதிரி தெரியாமல் உள்ளே வந்து மறைந்து நின்று பார்க்கிறார். இது இப்படியே தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் இது அந்த வேலைக்காரிக்கும் தெரிந்து விடுகிறது. அவர் என்ன செய்கிறார். சரி பார்த்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுகிறார்.
இந்த இரண்டு பெண்கள் ஏன் புரிந்துகொள்ள முடியாத இந்த செயலை செய்கிறார்கள். அது அவர்களை எந்த மாதிரியான சூழலில் கொண்டு நிறுத்துகிறது என்பது பார்வையாளர்களின் புரிதலுக்கு விடப்பட்டுள்ளது. அதுவே இந்தப் படத்தின் அழகாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு மனிதன் ஏன இன்னொருவரின் அந்தரங்கத்தை தெரிந்துகொண்டு கிளர்ச்சி அடைகிறான். தனது அந்தரங்கத்தை இன்னொருத்தருக்கு காட்டுவதன் மூலம் கிளர்ச்சியடைகிறார் இன்னொருவர். ஒரு புரிதலுக்காக இந்தப் படத்தை மற்றொரு படத்தின் காட்சியோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
பாரசைட்
ஆஸ்கர் விருது வாங்கிய பாரசைட் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சி நினைவிற்கு வந்து போகலாம். காமத்தை சுவாரஸ்யப்படுத்துவது அதில் இருக்கும் ஒரு சின்ன கீழ்மை. ஆங்கிலத்தில் டர்ட்டி என்று சொல்லுவார்கள். ஒரு பணக்காரனுக்கு ஏழை கீழானவனாகத் தெரிவதால் அவனது காமமும் கீழானதாக தெரிகிறது. அது அவனுக்கு கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. இது பாரசைட் படத்தின் காட்சி. அதே நேரத்தில் இந்தக் கதையில் தனது உடலுறவை ஒரு உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் பார்ப்பதால் கிளர்ச்சியடைகிறார் ஒருவர்.
பெண்களுக்குக் காமம் என்பது என்பது தயங்கித் தயங்கி பேசும் ஒரு விஷயமாக கற்பிக்கப்பட்டிருக்கும் சூழல் இருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் ஒரு பெண் தன்னை இன்னொருவர் பார்க்கிறார் என்கிறபோது அது அவருக்குப் அசெளகரியத்தை தராமல் அதை அவர் ரசிக்கவே செய்கிறார் என்று எளிமையாக புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்த இரண்டு பெண்களின் சுயநலத்திற்கு நடுவில் ஒரு ஆண் பரிதாபமாக மாட்டிக்கொள்வதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.