Anant - Radhika Wedding : அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்..
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
உலகத்தில் எந்த ஒரு திருமண கொண்டாட்டமும் இவ்வளவு நீண்ட காலம் நடந்திருக்காது என்கிற அளவிற்கு ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண கொண்டாட்டங்கள் நீண்டு வருகின்றன. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த திருமணத்திற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகின்றன. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் உலகத்தில் உள்ள மாபெரும் பிரபலங்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றது. பாப் பாடகி ரிஹானா , பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் , தொழிலதிபர் பில் கேட்ஸ் , மார்கன் ஸ்டேன்லியின் தலைமையை அதிகாரி டெட் பிக் , டிஸ்னி தலைமை அதிகாரி பாப் ஈகர் என இந்த பட்டியலில் உலகின் புகழ்பெற்ற பெரும்பாலான நபர்களை உள்ளடக்கிவிடலாம்.
திரைத்துறையைப் பொறுத்தவரை பாலிவுட் , கோலிவு , டோலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டார்கள் முதல் சுட்டி ஸ்டார்கள் வரை இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
தரையில் கொண்டாட்டம் சலித்துபோய் அடுத்தபடியாக கடலில் கொண்டாட்டங்களை தொடங்கினார்கள். ரோம் முதல் பிரான்ஸ் வரை கப்பலில் பார்ட்டி வைத்து கடந்த மே மாதம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள் . உலகப் புகழ்பெற்ற பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஷகிரா மற்றும் கேடி பெர்ரி இந்த கொண்டாட்டத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். இதற்கு பல கோடிகள் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப் பட்டது.
ஆதரவற்றவற்ற ஜோடிகளுக்கு திருமணம்
வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்தை முன்னிட்டு இன்னும் சில நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது ரிலையன்ஸ் குழுமம். இதன்படி இந்த திருமணத்தை ஓட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த திருமண நிகழ்வு வரும் ஜூலை 2 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கார் மாவட்டத்தில் மாலை 4:30 மணியளவில் இந்த நிகழ்வு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு ஆதரவு தெரிவிக்க நினைப்பவர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

