Cannes 2024: கான் திரைப்பட விழாவில் இந்தியத் திரைத்துறைக்கு பெருமை சேர்த்த பெண்கள்... ராகுல் காந்தி வாழ்த்து!
Cannes - Payal Kapadia: கான் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் விருது வென்ற 'All We Imagine As Light' படக்குழுவினருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கான் திரைப்பட விழா 2024
உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களை கெளரவிக்கும் நிகழ்வாக வருடந்தோறும் பிரான்ஸில் கான் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மே 14ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை இத்திரைப்பட விழா நடைபெற்றது. உலகம் முழுவதில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. இந்தியா சார்பாக இந்த ஆண்டு பாயல் கபாடியா இயக்கத்தில் 'All We Imagine As Light' திரைப்படம் இவ்விழாவின் உயரிய விருதான Palme d'Or விருதுக்கு போட்டியில் கலந்துகொண்டது,
யார் இந்த பாயல் கபாடியா
Indian stars shining bright at the 77th Cannes Film Festival!
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2024
Congratulations to Payal Kapadia and the entire team of 'All We Imagine As Light' for clinching the prestigious Grand Prix award.
Kudos to Anasuya Sengupta for winning the Best Actress award under the Un Certain… pic.twitter.com/5lRPgdeezI
இந்திய திரைப்படக் கல்லூரியில் படித்தவர் பாயல் கபாடியா. Watermelon, Fish and Half Ghost, Afternoon Clouds, The Last Mango Before the Monsoon ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். And What is the Summer Saying, A Night of Knowing Nothing ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய A Night of Knowing Nothing ஆவணப்படம் ரோகித் வெமுலாவின் தற்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
கான் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது, தற்போது பாயல் கபாடியா இயக்கியுள்ள படம் 'All We Imagine As Light' . கடந்த முப்பது ஆண்டுகளில் கான் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் தேர்வான ஒரே படம் பாயல் கபாடியாவின் 'All We Imagine As Light' . இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம் மற்றும் ஹிருது ஹாரூன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். மும்பையைச் சேர்ந்த இரண்டு மலையாளப் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் இந்த விழாவில் இரண்டாவது பரிசான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை நேற்று மே 25ஆம் தேதி வென்றுள்ளது.
இந்த விருதின் மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கே பெருமை சேர்த்துள்ளார் பாயல் கபாடியா. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாயல் கபாடியா மற்றும் அவரது படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வாழ்த்து
” மதிப்புமிக்க கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்று இந்தப் பெண்கள் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்கள். உலகத்தின் முன் இந்தியா பிரகாசமாக ஜொலிக்கிறது. ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைக்கும் இந்தப் பெண்கள் பெருமை சேர்த்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.