TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விடாதீங்க.. யாரையும் நம்பாதீங்க - விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் பேரரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரையும் படித்தால் மிகச்சிறந்த தலைவராக வருவீர்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. இப்படியான நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் விஜய் அரசியல் வருகையை வரவேற்றுள்ளதோடு, சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள அவர், “சினிமாவுலகம் சார்ந்ததால் நடிகர் விஜய் இதுவரை ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தார். நிறைய சம்பளம் வாங்கும் அந்த நடிகர் இன்று தலைவராகி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற வேண்டும் இல்லை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தால் அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது. கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போனதை பார்த்துள்ளோம். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்றால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சரானால் என்றால், அவரின் அடிச்சுவடை கூட தொடுவதற்கு இங்கு யாரும் இல்லை.
அவர் எப்படி இருந்தார் என்று பார்த்தால் முதலில் காங்கிரஸ், பின்னர் திமுகவில் இருந்தார். உழைத்தார், மக்களை சந்தித்தார், கிராமம் வரை போனார், மக்களோடு மக்களாய் வந்தார். அண்ணா கூட ஒரு கனி என் மடியில் விழுந்தது. அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். அதுதான் இதயக்கனி எம்ஜிஆர் என சொன்னார். ஆக அந்தளவுக்கு அவர் தன் வாழ்வை ஏழை மக்களுக்கு அர்ப்பணித்தார். காரணம் அவர் சிறுவயதில் சாப்பாட்டுக்கும் கஷ்டப்பட்டார். அந்த கஷ்டத்தை ஏழை மக்கள் படக்கூடாது என்பதற்காக பாடுபட்டார்.
தம்பி விஜய்யும் வெற்றி பெற வேண்டும். ஆனால் எம்ஜிஆர் செய்ததில் 15 அல்லது 20 சதவீதம் இறங்கி வந்து தொண்டு செய்யுங்கள். மக்களோடு பழகுங்கள்.மேடையில் இருந்துக் கொண்டு புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விட சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இனிமேல் அப்படி இருக்கக்கூடாது. நல்லதுக்காகவே இதை சொல்கிறேன். திமுக, அதிமுக, பாஜக, விசிக என எந்த கட்சியையும் யாரையும் குறை சொல்ல முடியாது. இதற்கிடையில் விஜய் கட்சி ஆரம்பித்திப்பது தப்பில்லை.
இனிமேல் உங்கள் நடவடிக்கை, கொள்கைகள், மக்களிடத்தில் சென்று சேர்வது என்பதை வைத்து தான் மக்களின் ஆதரவை பெறுவீர்கள். யாரையும் நம்பாதீர்கள், நேரடியாக வர வேண்டும். பேரரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரையும் படியுங்கள், மிகச்சிறந்த தலைவராக வருவீர்கள். நிறைய திட்டங்கள் சிறப்பாக பண்ணியிருக்கிறார். இனிமேல் நான் படிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார். 200 கோடி ரூபாய் சம்பளத்தை துறக்கிறார் என்றால் அவர் மக்களுக்காக இறங்கி விட்டார் என்றே அர்த்தம்” என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.