Priyanka Chopra: விஜய்யுடன் நடிக்க அழுத பிரியங்கா சோப்ரா... உதவிய ராஜூ சுந்தரம்.. உண்மையை உடைத்த அம்மா!
Priyanka Chopra: இன்று ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழன் படத்தின்போது சந்தித்த சிக்கல்களைப் பற்றி பேசியுள்ளார் பிரியங்காவின் அம்மா.
தமிழ் சினிமாவில் உலக அழகிகள் பலரும் நடிகைகளாக பரிணாமம் எடுத்து கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). தமிழ் சினிமா மூலமாகவே அவர் நடிகையாக அறிமுகமானார். அவர் தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது எப்படி ரியாக்ட் செய்தார் என்பதை பிரியங்காவின் அம்மா சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. முதலில் அந்த வாய்ப்பு வந்த போது அதற்கு சம்மதம் சொல்லத் தயங்கி உள்ளார். பிரியங்காவின் அம்மா மது தான் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்காவின் அம்மா மது பேசுகையில் “பிரியங்காவுக்கு படங்களில் நடிக்க விருப்பமில்லை. தென்னிந்திய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது நான் அதை அவளிடம் சென்று கூறினேன். அதைக் கேட்ட அவள் எனக்கு படங்களில் நடிக்க விருப்பமில்லை” எனக் கூறி அழுதுவிட்டாள்.
அவள் எப்போதுமே பெற்றோர் பேச்சைக் கேட்டு நடக்கும் நல்ல பிள்ளை. அதனால் என்னுடைய பேச்சைக் கேட்டு அவள் நடிக்க சம்மதம் தெரிவித்தாள். மொழி தெரியாத ஒரு படமாக இருந்தாலும் அதில் நடிக்கத் தொடங்கிய பிறகு அவளுக்கு நடிப்பு மிகவும் பிடித்துவிட்டது. அதிலும் அந்தப் படத்தின் ஹீரோ விஜய் ஒரு ஜென்டில்மேன். பிரியங்காவுக்கு டான்ஸ் ஓரளவு தெரியும். அவளால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால் அந்தப் படத்தின் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் அவளுக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்தார். அவளுக்கு டான்ஸ் மீது அதிக ஈடுபாடு வந்து காலை முதல் மாலை வரை கடுமையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டாள். சினிமா தான் அவளுடைய எதிர்காலம் என்பதை அப்படத்தின் மூலம் தான் அவள் அறிந்து கொண்டாள்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருந்தாலும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து இன்று ஹாலிவுட் படங்களில் கலக்கும் அளவுக்கு சிறந்த நடிகையாக விளங்குகிறார் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பிரியங்கா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஃபிராங்க் ஈ ஃப்ளவர்ஸ் இயக்கத்தில் 'தி பிளஃப்' படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் தான் ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்த காமெடி கலந்து அதிரடி திரைப்படத்தில் இட்ரிஸ் எல்பா, ஜான் சினா மற்றும் ஜாக் குவைட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.